தமிழக அரசின் சாதனை திட்டங்கள் தொடர அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் - அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரசாரம்


தமிழக அரசின் சாதனை திட்டங்கள் தொடர அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் - அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரசாரம்
x
தினத்தந்தி 2 April 2019 10:30 PM GMT (Updated: 2 April 2019 8:42 PM GMT)

தமிழக அரசின் சாதனை திட்டங்கள் தொடர அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அரூர் தொகுதி பிரசாரத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வி.சம்பத்குமார் போட்டியிடுகிறார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் வேட்பாளர் பல்வேறு கிராமங்களில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.நேற்று அரூர் (தனி) தொகுதிக்குட்பட்ட மோப்பிரிப்பட்டி, வடுகப்பட்டி, அக்ரகாரம், செட்ரப்பட்டி, சந்தப்பட்டி, கொளகம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 52 கிராமங்களில் வேட்பாளர் வி.சம்பத்குமார் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் கே.பி.அன்பழகன் வடுகப்பட்டி கிராமத்தில் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழக அரசு பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு மேலும் பல மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றிட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வித்துறையின் மூலம் பல்வேறு அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை எளிய மாணவ-மாணவிகள் தரமான கல்வியை பெற்று வருகிறார்கள். இதுபோன்ற சாதனை திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும், என்று கூறினார்.

வாக்குசேகரிப்பின்போது அ.தி.மு.க. வக்கீல் அணி மாவட்ட துணை செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி, மாவட்ட துணை செயலாளர் செண்பகம் சந்தோஷ், மாவட்ட மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் சரவணன், கூட்டுறவு சங்க தலைவர் சிவன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் எம்.ஆர்.புள்ளியப்பன், விஸ்வநாதன், ஒன்றிய பேரவை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. மாநில துணைத்தலைவர் அரசாங்கம், மாநில நிர்வாகி அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், செந்தில், பா.ஜனதா மாவட்ட செயலாளர் கிருத்திகா, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் விஜயகாந்த், த.மா.கா. வட்டார தலைவர் சிவா அரவிந்தன் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story