மோடி அரசுக்கு மக்கள் முடிவு கட்டிவிட்டனர்: தமிழகத்தில் ஸ்டாலின் ஆதரவு அலை வீசுகிறது நெல்லையில் உதயநிதி பிரசாரம்
தமிழகத்தில் ஸ்டாலின் ஆதரவு அலை வீசுகிறது. மோடி அரசுக்கு மக்கள் முடிவு கட்டிவிட்டனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
நெல்லை,
நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து பாளையங்கோட்டையில் நேற்று மாலையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். திறந்த வேனில் நின்றபடி உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
இந்த மண்ணில் இருந்து நமது வெற்றி வேட்பாளர் ஞானதிரவியத்திற்கு வாக்கு கேட்பதை பெருமையாக கருதுகிறேன். கடந்த 12 நாட்களாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறேன். மக்கள் அலை அலையாக கூடி வரவேற்கிறார்கள். எனக்கே இவ்வளவு கூட்டம் என்றால் நமது தலைவருக்கு இதைவிட 20 மடங்கு 30 மடங்கு கூட்டம் அதிகமாக வருகிறது. பொதுக்கூட்டம் நடத்தினால் அது மாநாடு போல் உள்ளது.
இதை பார்த்து மக்கள் கூறுகிறார்கள் இது மோடி எதிர்ப்பு அலை என்று, ஆம் இது மோடி எதிர்ப்பு அலைதான். தமிழகம் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் ஆதரவு அலை வீசுகிறது. மக்கள் முடிவு கட்டிவிட்டார்கள் வருகிற 18-ந் தேதி மோடிக்கு ‘கெட்-அவுட்‘ தான்.
பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் மோசடியான ஆட்சியை கொடுத்தார். கடந்த தேர்தல் நேரத்தில் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று கூறினார். ஆனால் ஒரு பைசாகூட போடவில்லை. நமது காசை எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டார். கருப்பு பணத்தை ஒழிப்பேன், தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்றார். ஆனால் எதையும் ஒழிக்கவில்லை. மக்களுக்கு தான் அதிகமாக துன்பத்தை கொடுத்துள்ளார். அவரை ஒழிக்க நமக்கு தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது. அது தான் நடைபெற உள்ள தேர்தல். இதை மக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
கலைஞர் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேசும்போது சொல்வார், சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று. அதேபோல் நமது தலைவர் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் நீட் தேர்வு ரத்து, விவசாய கடன் ரத்து, கல்வி கடன் தள்ளுபடி, மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ், கியாஸ், பெட்ரோல், கேபிள் கட்டணம் குறைக்கப்படும். முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறி உள்ளார். இந்த அறிவிப்புக்கு எல்லாம் முத்தாய்ப்பாக ராகுல்காந்தி 5 கோடி ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தை ராகுல்காந்தி அறிவித்த உடனேயே மோடி மயங்கி விழுந்துவிட்டார்.
இந்தியாவில் உள்ள மொத்த மக்களும் சொல்கிறார்கள் இந்த தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன். ஒரு கதாநாயகன் இருந்தால் ஒரு வில்லன் இருப்பான். அந்த வில்லன்தான் மோடி. இந்தியாவிற்கு வில்லன் மோடி தான். ஒரு வில்லன் இருந்தால் அவனுக்கு இரண்டு கைக்கூலிகள் இருப்பார்கள். அதுபோல் தமிழகத்தில் மோடிக்கு இரண்டு கைக்கூலிகள் இருக்கிறார்கள். அவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம். நகைச்சுவையாளர் அன்புமணி ராமதாஸ்.
இந்த அன்புமணி ராமதாஸ், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து டயர் நக்கி என்று கூறினார். இப்போது அன்புமணி ராமதாஸ், அந்த டயரை தான் நக்கிக்கொண்டு இருக்கிறார். இந்த தேர்தலோடு மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விரட்டப்படுவார்கள். அதற்கு நீங்கள் நெல்லை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியத்தை உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்து உள்ளார். அவர் வெளியே வந்த பிறகும், பேட்டிக் கொடுக்கக்கூடாது என்று கூறி உள்ளனர். இந்த சம்பவத்தில் பெரிய மனிதர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்பதால் அவரை பேட்டிக் கொடுக்கக்கூடாது என்று கூறி உள்ளனர். எந்த அளவுக்கு பெண்களுக்கு உரிமை இல்லை என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். தற்போது பொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணமே சந்தேகமாக உள்ளது. அந்த அம்மா எப்படி இறந்தார்கள் என்று யாராவது சொல்கிறார்கள். அந்த அம்மாவை 90 நாள் ஆஸ்பத்திரியில் வைத்து இருந்து யாரையும் பார்க்கவிடாமல் வைத்து இருந்தார்கள். ஜெயலலிதா இறந்த பின்னர் பதவி போனதும் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக கூறி தர்மயுத்தம் செய்தார். துணை முதல்-அமைச்சர் பதவி கிடைத்ததும் அதை பற்றி பேசவில்லை.
நமது ஆட்சி வந்ததும் ஜெயலலிதாவின் சாவில் உள்ள அனைத்து மர்மங்களும் அவிழ்க்கப்படும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ.அப்பாவு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல்மைதீன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முக்கூடல், அம்பை, களக்காடு, வள்ளியூர், கூடங்குளம் ஆகிய இடங்களிலும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
Related Tags :
Next Story