“எந்த தியாகமும் செய்து தூத்துக்குடி வெற்றியை மோடிக்கு சமர்ப்பிப்பேன்” தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு


“எந்த தியாகமும் செய்து தூத்துக்குடி வெற்றியை மோடிக்கு சமர்ப்பிப்பேன்” தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
x
தினத்தந்தி 2 April 2019 10:45 PM GMT (Updated: 2 April 2019 8:55 PM GMT)

எந்த தியாகமும் செய்து தூத்துக்குடி வெற்றியை மோடிக்கு சமர்ப்பிப்பேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர், விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் சங்கரப்பேரியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவரும், வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது கூறியதாவது;-

ஒரு வாய்ப்பை கொடுத்தால் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு பிரதமர் மோடி ஒரு உதாரணம், அமித்ஷா ஒரு உதாரணம். கனிமொழியும் ஒரு உதாரணம். பிரதமர் என்ற வாய்ப்பை கொடுக்கும்போது பிரதமர் மோடி இந்த நாட்டிற்கு நல்ல திட்டங்களை கொடுத்து இருக்கிறார். ஆனால் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் என்ற பதவியை கொடுத்த பின்பும் 2ஜியினால் சுருட்டோ சுருட்டு என சுருட்டியவர் தான் தி.மு.க வேட்பாளர். எனக்கு தொண்டர்கள் இருக்கும் இடம் தெரியும். சாமானிய மக்கள் இருக்கும் இடம் தெரியும். தலைவர்கள் இருக்கும் முகவரி தெரியும். ஆனால் நிச்சயமாக திகார் ஜெயிலின் முகவரி தெரியாது. அது தான் எனது தகுதி.

இந்த தூத்துக்குடி வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற வேண்டும். தூத்துக்குடியில் ஏற்பட்டு உள்ள கறையை துடைத்து எறிந்து இந்த தூத்துக்குடி முன்னேற்றமான தூத்துக்குடியாக வர வேண்டும். தாமரை ஏரியில் மலரலாம். குளத்தில் மலரலாம். இங்கு தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும். மலர்ந்தே தீரும். வெற்றி என்ற முத்தை நாம் பெற்றே தீருவோம். எந்த தியாகமும் செய்து தூத்துக்குடி வெற்றியை பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் சமர்பிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது;-

ஜெயலலிதா ஆன்மாவின் துணையுடன் அவரின் ஆட்சியை சீரோடும் சிறப்போடும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். தற்போது நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை வலிமையான பாரதம் திறமையான பிரதமர் என்ற முழக்கத்தோடு நாம் சந்திக்க உள்ளோம். இன்னார் தான் பிரதமர் என்று சொல்லி தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம். ஆனால் எதிர் அணியை சேர்ந்தவர்கள் யார் பிரதமர்? என்று சொல்வதற்கு கூட தெம்பு இல்லாமல் இந்த தேர்தலை சந்திக்கிறார்கள்.

பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த மண்ணிற்கு சொந்தக்காரர். அவர் தூத்துக்குடி மக்கள் ஏற்று கொள்ளும் வேட்பாளர். ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன நிலைபாட்டை எடுத்து இருப்பாரோ அந்த நிலைப்பாட்டை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் எடுத்து உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை அமையாத வெற்றி கூட்டணியை நாம் அமைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றோம். தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற வரலாற்றை நாம் உருவாக்கி காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மனித உரிமை காக்கும் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் பேசுகையில், ‘நமக்கு தடைகள் இல்லை. தடைகற்களும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கும் போது எனக்கு ஒரு ஞாபகம் தான் வருகிறது. தேசியமும், தெய்வீகமும் என்று எனது கொள்கை என அறிவித்த முத்துராமலிங்க தேவர் தான் நினைவுக்கு வருகிறார். நான் நிறை பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கான நேரம் இது அல்ல. பிரசாரத்தின் போது, நான் நினைத்ததை பேசுவேன் ‘ என்றார். தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பேசும் போது, இந்த தேர்தலை பொறுத்தவரை சாதி, மத பேதமில்லை. இந்த கூட்டணியில் அனைத்து சமுதாய தலைவர்களும் ஒன்று இணைந்து பிரசாரம் செய்கிறார்கள். தேவேந்திரகுல வேளாளர்களுக்கு சலுகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் அடிப்படையில் நாங்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளோம். இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜனை வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார்.

கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பேசும் போது, தூத்துக்குடி தொகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும், புல்லட் ரெயில் விடப்படும் என்று பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவிக்கிறார். ஆனால் கனிமொழி அது சாத்தியம் இல்லை என்கிறார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி தொகுதியில் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கி மேம்பாலங்கள், சாலைகள் அமைத்து கொடுத்து உள்ளார். துறைமுகம், விமான நிலையம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதே போன்று தூத்துக்குடி தொகுதியிலும் திட்டங்கள் கொண்டு வரப்படும். பலமான, வலிமையான தலைவர் மோடி. அவர் வான் வரை தாக்குதல் நடத்தி நிரூபித்து உள்ளார். ஆகையால் தாமரை சின்னத்தில் வாக்களித்து அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

இந்த விழாவில் த.மா.கா. மாநில செயலாளர் மால் மருகன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story