ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.13 லட்சம் சிக்கியது


ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.13 லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 3 April 2019 3:45 AM IST (Updated: 3 April 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.13 லட்சம் சிக்கியது.

ஈரோடு,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 6 குழுவாக பிரிந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் இதுவரை 4 சக்கர வாகனங்களை மட்டும் தடுத்து நிறுத்தி சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நேற்று முதல் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்களையும் சோதனை செய்து வருகிறார்கள்.

மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி அரசு பள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படை நிலைக்குழு–2 அதிகாரி மாதவன் தலைமையில், சப்–இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, விஜயகுமார் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் ரூ.9 லட்சத்து 17 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஸ்கூட்டரில் வந்தவர் ஈரோடு மாணிக்கம்பாளையம் சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (45) என்பதும், அவர் தறிப்பட்டறை நடத்தி வருவதும் தெரியவந்தது. சிவகிரியில் உள்ள ஏ.டி.எம். மில் பணம் எடுத்துக்கொண்டு அவர் தறிப்பட்டறைக்கு சென்றதாக தெரிவித்தார். ஆனால் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.9 லட்சத்து 17 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டு மொடக்குறிச்சி தாசில்தார் அஷ்ரபுன்னிசாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் பரிசல்துறை பகுதியில் அதிகாரிகள் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சரக்கு வாகனத்தில் டீத்தூள் வியாபாரியான சிவகிரி அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்த ரவிக்குமார், 88 ஆயிரத்து 590 ரூபாயுடன் சென்றது தெரியவந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளோடு அருகே உள்ள பெருந்துறை ஆர்.எஸ்.ரோட்டில் ஈரோடு மேற்கு பறக்கும் படை குழு–3 அதிகாரி பாஸ்கர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தைலா மற்றும் குழுவினர் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சரக்கு ஆட்டோவில் வந்த சென்னிமலையை சேர்ந்த மோகன மூர்த்தி என்பவர், அவல்பூந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் எண்ணெயை குன்னத்தூரில் விற்றுவிட்டு அதற்கான பணம் ரூ.95 ஆயிரத்து 920–யை எடுத்துக்கொண்டு திரும்பி செல்வதாக தெரிவித்தார். அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி சக்திவேல் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பர்கூர் மலைப்பகுதி மீன்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த ராஜூ என்பவர் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் சமூக நலத்துறை தாசில்தார் விஜயலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.13 லட்சத்து 12 ஆயிரத்து 510 சிக்கியது.


Next Story