1½ கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை அசைத்து கூட பார்க்க முடியாது துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


1½ கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை அசைத்து கூட பார்க்க முடியாது துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 3 April 2019 4:30 AM IST (Updated: 3 April 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

1½ கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை அசைத்து கூட பார்க்க முடியாது என்று துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மூலனூர்,

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக சி.மகேந்திரன் எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று இரவு உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு திறந்தவேனில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:–

மக்களின் தேவைகளை ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி பூர்த்தி செய்து வருகிறார். தமிழகத்தில் விவசாயம் வளர்ச்சி அடைந்து கடந்த 4 ஆண்டுகளில் நெல் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் முதல் இடம்பிடித்து மத்திய அரசின் விருதை பெற்று இருக்கிறோம்.

தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.3 லட்சம் கோடிக்கு முதலீடு செய்து 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க உள்ளோம். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. அரசு உள்ளது.

மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு கண்டார். அதுபலிக்க வில்லை. நாடாளுமன்ற தேர்தலுடன் அ.தி.மு.க. காணாமல் போகும் என்கிறார். எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் இது. கருணாநிதி எவ்வளவோ சூழ்ச்சி செய்தும் அ.தி.மு.க.வை அழிக்க முடியவில்லை. 1½ கோடி தொண்டர்கள் கொண்ட அ.தி.மு.க.வை அசைத்துக்கூட பார்க்க முடியாது. 1½ கோடி விழுதுகள் ஊன்றி ஆலமரமாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து தமிழகத்தை தீக்கிரையாக்குகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க. ஆட்சியில் இருந்த பொழுது வன்முறையும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டது. நில அபகரிப்பு, மற்றவர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலத்தை அடித்து பிடுங்குதல் போன்றவை நடந்ததை மக்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் 2011–ம் ஆண்டு ஜெயலலிதா முதல் –அமைச்சர் ஆனதும், நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டார்கள். அதன்பிறகு நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை. பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய மகேந்திரனை மீண்டும் எம்.பி.யாக தேர்வு செய்ய இரட்டை இலை சினத்திற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து உடுமலையில் பிரசாரத்தை முடித்துக்கொண்ட துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து மூலனூர் வந்தார். அங்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வெங்கு என்கிற மணிமாறனை ஆதரித்து பேசியதாவது:–

தற்போது பல்வேறு கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த தேர்தலில் நீங்கள் எஜமானர்களாக இருந்து நல்லதொரு தீர்ப்பை எங்களுக்கு வழங்கும் தேர்தலாக தான் இது இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 10 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சி செய்தது. அவர்கள் ஆட்சி செய்த போது எதையும் மக்களுக்கு செய்யவில்லை. தமிழகத்தின் சார்பாக தி.மு.க.வின் 9 மந்திரிகள் அங்கே இடம் பெற்றிருந்தனர். ஆனால் எந்த ஒரு தொலைநோக்கு திட்டமும் நம்முடைய தமிழக மக்களுக்கு கொண்டுவந்து சேர்க்கவில்லை.

தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வரியாக மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால் மத்தியில் இருந்து எந்த திட்டங்களும் வரவில்லை. சேது சமுத்திர திட்டம் மட்டுமே அறிவித்தார்கள். இந்த திட்டத்திற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். அறிவியல் ரீதியான விளக்கத்தையும் அவர்களுக்கு கொடுத்தார். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை. ரூ.40 ஆயிரம் கோடி ரூபாயை அதற்கு செலவழித்தனர். இது செலவழித்தார்களா? அல்லது கட்சியினர் வீடுகளில் கொண்டு போட்டார்களா என்று தெரியவில்லை.

காவிரி நடுவர் மன்றம் நிறுவப்பட்டு இறுதி தீர்ப்பு வந்தது. இது அதிகாரம் உள்ளதாக மாற்ற வேண்டுமென்றால் அரசு கெஜட்டில் வெளியிட வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால் அதை தி.மு.க. ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து ஜெயலலிதா முதல்–அமைச்சராக பதவியேற்ற பின்னர் சட்டப்போராட்டம் நடத்தி அரசாணையை அரசிதழில் வெளியிட்டார்.

இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்களை கொன்று குவித்தனர். அப்போதைய மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டிருக்க மாட்டார்கள். ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பது போல் நாடகமாடியது தான் கருணாநிதியின் சாதனை. ஆனால் ஜெயலலிதா நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்தார்.

மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை நடைமுறைப் படுத்தினார். கனவு திட்டமான 2023–ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் இருக்கும் 15 லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடாக கட்டி கொடுப்போம் என ஜெயலலிதா அறிவித்தார். இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மீதம் உள்ள வீடுகள் விரைவில் கட்டிக் கொடுக்கப்படும். திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இல்லத்தரசிகளின் பணிச்சுமையை குறைக்க விலையில்லா மிக்சி கிரைண்டர் கொடுத்தது அ.தி.மு.க. அரசு. சட்டம்– ஒழுங்கை பராமரிப்பதில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது.

மு.க.ஸ்டாலினுக்கு முதல்–அமைச்சராக வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டுள்ளது. ஜோதிடரின் அறிவுறுத்தலை கேட்டுவிட்டு கலர் கலராக சட்டைகளை போட்டு சைக்கிளில் பயணத்தை மேற்கொண்டார். நடந்து வந்தார். டிராக்டர் ஓட்டினார். பின்னர் கரும்பு தோட்டத்திற்குள் சிமெண்டு தரை அமைத்து அதில் நடந்து சென்றார். டீக்கடையில் டீ குடித்தார். ஆனால் நான் டீக்கடையையே நடத்தியவன். மு.க.ஸ்டாலினின் சித்துவேலைகள் நம்மிடம் பலிக்காது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை தொண்டர்கள் இயக்கமாகவே இருந்து வருகிறது. நமது இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று கருணாநிதியின் தொண்டர்களும் திட்டமிட்டனர். ஆனால் யார் நினைத்தாலும் இந்த எக்கு கோட்டையை அசைக்க முடியாது. இது மிகப்பெரிய ஆலமரம். தொண்டர்கள் இந்த ஆலமரத்தை காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க.ஆளுங்கட்சியாக இருக்கும்போதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் வன்முறையையே செய்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வினர் பிரியாணி சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் கடைக்காரரை தாக்குகின்றனர். வன்முறை கலாசாரத்தை கட்டவிழ்த்துவிட்டு கடந்த காலத்தில் தி.மு.க.வினர் ஆட்சியை பிடித்தனர்.

அ.தி.மு.க.வை அழிக்க கருணாநிதி நினைத்தார். ஆனால் தந்தையால் முடியாததை அவருடைய மகன் மு.க.ஸ்டாலினால் எதுவும் செய்ய இயலாது. தற்போது கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளனர். அவர்கள் நேரத்திற்கு நேரம் மாறுபவர்கள். இதனால் வாக்காளர்களாக இருந்து நல்லதொரு தீர்ப்பை நீங்கள் வழங்குவீர்கள் என்று நம்புகின்றோம். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும். மோடி அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட உள்ளது. இதனால் உங்களது வாக்குகளை நம்முடைய வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவர் அவர் பேசினார்.


Next Story