வருமானவரித்துறையை அரசியல் காரணங்களுக்கு பயன்படுத்துவதா? முத்தரசன் குற்றச்சாட்டு

வருமானவரித்துறையை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதா என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.
சிவகங்கை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– இந்தியாவில் இதுவரை 16 பொதுத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால் தற்போது நடைபெறும் தேர்தல் மிக வித்தியாசமானது. ஜனநாயகத்தை மேலும் உறுதிபட காப்பற்றிட வேண்டிய தேர்தல். தற்போது நாடு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
எனவே நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையுடன் பார்க்க வேண்டிய தேர்தல். அத்துடன் நம்முடைய அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும். காலம் காலமாக நமது நாட்டில் மதசார்பின்மை கொள்கை உள்ளது. அது இந்த தேர்தலில் கேள்விக்குறியாகி வருகிறது.
பிரதமர் 2014–ல் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சென்ற தேர்லில் டீ விற்றவர் என்று கூறிய மோடி தற்போது காவலர் என்று கூறி வருகிறார். தமிழகம் நீண்ட கடற்கரையை கொண்டது. இங்கு வறட்சி, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சட்ட பூர்வ நிதியை கூட மத்திய அரசு தரவில்லை. தமிழக டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகும். தற்போது மத்திய, மாநில அரசுகள் எதிர்க்கட்சிகளின் வெற்றியை தடுக்கும் வகையில் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். வருமானவரித்துறை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. கூட்டணி பா.ஜ.க.வின் நிர்பந்தத்தால் ஏற்பட்ட கூட்டணி. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள கட்சிகள் பா.ஜ.க.வை எதிர்த்து நிற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






