மதுரை கோட்ட ரெயில்வே மேலாளராக தமிழகத்தை சேர்ந்த அதிகாரியை நியமிக்க வலியுறுத்தல்


மதுரை கோட்ட ரெயில்வே மேலாளராக தமிழகத்தை சேர்ந்த அதிகாரியை நியமிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 April 2019 10:54 PM GMT (Updated: 2 April 2019 10:54 PM GMT)

மதுரை கோட்ட ரெயில்வே மேலாளராக தமிழகத்தை சேர்ந்த அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை,

இந்திய ரெயில்வேயில், மண்டல பொதுமேலாளர்கள், கோட்ட ரெயில்வே மேலாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு யூ.பி.எஸ்.சி. தேர்ச்சி பெற்ற இந்திய ரெயில்வே சர்வீசின் மூத்த அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்கிடையே, தென்னக ரெயில்வே பொது மேலாளராக இருந்த குல்செரஸ்தா கடந்த 31–ந் தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக ஐ.சி.எப். பொது மேலாளர் ராகுல் ஜெயின் 3 மாதத்துக்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளராக பணிபுரிந்து வரும் நீனு இட்டியேராவின் பதவிக்காலம் வருகிற 16–ந் தேதியுடன் முடிவடைகிறது.

கோட்ட மேலாளர்களை பொறுத்தமட்டில் 2 வருடங்களுக்கு மட்டுமே பணியாற்ற முடியும். ஆனால், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடுமுழுவதும் அமலில் உள்ளதால், தேர்தல் முடிவுகள் வரும் வரை பணியிட மாறுதல் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், தென்னக ரெயில்வே தலைமை வர்த்தக மேலாளராக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியேரா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான உத்தரவு எதுவும் வராதநிலையில், மதுரை கோட்டத்துக்கு புதிய ரெயில்வே மேலாளராக யார் பொறுப்பேற்க உள்ளார் என்ற பரபரப்பு ரெயில்வே வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. தென்னக ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு மற்றும் சேலம் கோட்டங்கள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலும் வடஇந்தியாவை சேர்ந்த அதிகாரிகளே கோட்ட மேலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதனால், அந்தந்த கோட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளின் புவியியல் அமைப்பு மற்றும் தேவைகள் குறித்து தெரிவதில்லை. மதுரை கோட்ட ரெயில்வே மேலாளராக பணியாற்றி வரும் நீனு இட்டியேரா நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.

மிகவும் நேர்த்தியாக பணி செய்ய வேண்டும், பயணிகளிடம் இருந்து பணம் பெற்று ரெயில்வே சேவைகளை வழங்குவதால், பயணிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். இதனால், கடந்த 2 வருடங்களில் மதுரை கோட்டத்தில் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரையும் சிறப்பாக பணியாற்ற வைத்துள்ளார்.

இவரது கண்டிப்புக்கு அதிகாரிகளும் தப்பவில்லை. அதிகாரிகள் காலை 9.30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும், பணியாளர்கள் அனைவரும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்ற பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தார். இதனால், மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பயணிகளின் கோரிக்கையை பெருமளவு நிறைவேற்றி தந்துள்ளார். எனவே, புதிதாக நியமிக்கப்படும் மேலாளர் தமிழகத்தை சேர்ந்தவராகவும், திறமையானவராகவும் இருக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பணியாளர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story