கள்ளக்குறிச்சியில், குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
கள்ளக்குறிச்சியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி நகராட்சி 4-வது வார்டுக்குட்பட்டது காட்டுப்புரி தக்கா பகுதி. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த பகுதிக்கு சரவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தினந்தோறும் தங்களது பகுதிக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் குடிநீர் வினியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த காட்டுப்புரி தக்கா பகுதி மக்கள் 25-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க கோரி கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் குடிநீர் பிரச்சினை குறித்து நகராட்சி உயர் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்று கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story