திண்டுக்கல் அரசு மருத்துவமனை பிணவறையில், இறந்தவரின் உடலை வைப்பதில் சிக்கல்


திண்டுக்கல் அரசு மருத்துவமனை பிணவறையில், இறந்தவரின் உடலை வைப்பதில் சிக்கல்
x
தினத்தந்தி 3 April 2019 5:07 AM IST (Updated: 3 April 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனை பிணவறையில், இறந்தவரின் உடலை வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முருகபவனம், 

திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், வேடசந்தூர், கொடைக்கானல் உள்பட 13 இடங்களில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக உள்ளது. இதையொட்டி இங்கு பல்வேறு நவீன சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திண்டுக்கல் மின் மயான அறக்கட்டளை சார்பில் குளிர் சாதன வசதியுடன் கூடிய பிணவறை இங்கு கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த பிணவறையில், இறந்த 6 பேரின் உடல்களை பாதுகாத்து வைக்கலாம்.

இந்நிலையில் இந்த பிணவறையில் பொருத்தப்பட்டுள்ள குளிர்சாதன எந்திரம் பழுதடைந்ததால் இங்கு இறந்தவர்களின் உடல்களை வைக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக பிணவறையின் குளிர்சாதன எந்திரம் அடிக்கடி பழுதடைந்து பிறகு தானாகவே சரியாகி மீண்டும் இயங்கி வந்தது. இந்தநிலையில் முற்றிலுமாக குளிர்சாதன எந்திரம் பழுதடைந்து விட்டது. இறந்து போன 2 பேரின் உடல்கள் தற்போது இங்கு உள்ளது. தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டிகளில் அந்த உடல்கள் பத்திரமாக வைக்கப்படும்.

இந்நிலையில் பிணவறையின் குளிர்சாதன எந்திரத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டொரு நாட்களில் இக்குறைகள் சரி செய்யப்பட்டு விடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story