திண்டுக்கல்லில் 2-வது நாளாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது - சாலைகள் வெறிச்சோடின
திண்டுக்கல்லில் 2-வது நாளாக 104 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடின.
திண்டுக்கல்,
பருவநிலை மாற்றம் காரணமாக பருவமழை பொய்த்து வருகிறது. இதனால் வெயிலின் உக்கிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களை தான் கோடைகாலம் என்று கூறுவோம். கோடைகாலத்தில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துவதை அனைவரும் அறிவோம்.
ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1½ மாதங்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் பெரும்பாலான நாட்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து உள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதைத் தொடர்ந்து நேற்றும் காலையில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. மதிய வேளையில் வெயில் 104 டிகிரியை தாண்டியது. இதன்மூலம் 2-வது நாளாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் தவித்தனர். வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் காணப்பட்டது.
இதன் காரணமாக மக்கள் மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்தனர். இதனால் மிகவும் பரபரப்பாக காணப்படும் திண்டுக்கல் மெயின்ரோடு, திருச்சி சாலை, தாடிக்கொம்பு சாலை உள்பட முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. மக்கள் நடமாட்டம் குறைந்ததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேநேரம் கம்பங்கூழ், இளநீர், நுங்கு, பதநீர் விற்பனை மும் முரமாக நடந்தது.
Related Tags :
Next Story