வானவில் : சோனியின் சிறிய ரக கேமரா


வானவில் : சோனியின் சிறிய ரக கேமரா
x
தினத்தந்தி 3 April 2019 6:40 PM IST (Updated: 3 April 2019 6:40 PM IST)
t-max-icont-min-icon

மின்னணு பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் சோனி நிறுவனம் சிறிய ரக கேமராவை அறிமுகம் செய்துள்ளது.

2.32 அங்குல நீளம், 1.59 அங்குல அகலம் மற்றும் 1.37 அங்குலம் உயரம் கொண்டது. இதன் திரை பிளிப்அப் மாடலில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது தேவையான போது கேமராவிலிருந்து வெளியே வரும். பிறகு அதனை உள்ளே தள்ளி வைத்துக்கொள்ளலாம். இதனால் இடத்தை பெரிதாக ஆக்கிரமிக்காது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எக்ஸ்.ஓ. என்ற பெயரில் சோனி நிறுவனம் கேமராவை அறிமுகம் செய்தது. அதில் மேம்பட்ட மாடலாக ஆர்.எக்ஸ்.ஓ.2 என்ற மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 180 டிகிரி கோணத்தில் திரை பிளிப் அப் ஆகும். மிகச்சிறியதாக இருப்பதால் இதை பாக்கெட்டில் போட்டுக் கொள்ள முடியும். அதேசமயம் மிகவும் துல்லியமாக படங்களை எடுக்க இது உதவும்.

மிகவும் உறுதியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நீர்புகா தன்மை 10 மீட்டர் ஆழம் வரை தாக்குப் பிடிக்கும். அத்துடன் எளிதில் புழுதி படியாது. கைதவறி கீழே விழுந்தாலும் நொறுங்காத தன்மையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 15.3 மெகா பிக்ஸெல் சி.எம்.ஓ.எஸ். சென்சார் மற்றும் சோனியின் சிறப்பு மிக்க பயோன்ஸ் இமேஜ் பிராசஸர் உள்ளது. இதன் சிறப்பம்சமே புகைப்படம் எடுக்கும் பொருளின் நிறம் அப்படியே பதிவாகும். ஒரு விநாடிக்கு 16 பிரேம்களை இது எடுக்கும். இது மிகச் சிறந்த ஆக்‌ஷன் கேமராவாகும். நிகழ்வுகளை விரைவாக படமெடுக்க விரும்புவோருக்கு மிகவும் ஏற்றதாகும். இதில் செல்பி படம் மற்றும் டேபிள்டாப் படம் எடுக்க முடியும். இரவில் படம் எடுக்க இதில் 8012800 ஐ.எஸ்.ஓ. ரேஞ்ச் வசதி உள்ளது. இது குறைந்த ஒளி உள்ள பகுதிகளையும் படம் எடுக்கும்.

இதில் வீடியோ படம் எடுக்கவும் முடியும். அதற்கேற்ப 4 கே வீடியோ 30 எப்.பி.எஸ். வேகத்தில் பதிவாகும். இதில் மைக்ரோபோன் ஜாக் உள்ளதால் ஒலியும் பதிவாகும். மேலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் கண்ட்ரோல் வசதி உள்ளதால் ஸ்லோமோஷன் புகைப்படங்களை எடுக்கவும் வசதியாக உள்ளது. இதில் 4 கே ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் இருக்கிறது. கையடக்கமான ஆக்‌ஷன் கேமராவின் விலை 700 டாலர் (சுமார் ரூ. 47,600). வட அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ள இந்த கேமரா விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

Next Story