புதைக்கப்பட்ட நிலையில் பிணம்: பெண்ணை வெட்டி கொலை செய்தது அம்பலம் உடலை மீட்க நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியல்


புதைக்கப்பட்ட நிலையில் பிணம்: பெண்ணை வெட்டி கொலை செய்தது அம்பலம் உடலை மீட்க நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 April 2019 4:00 AM IST (Updated: 3 April 2019 10:18 PM IST)
t-max-icont-min-icon

மாதனூர் அருகே புதைக்கப்பட்ட நிலையில் பெண் பிணம் கிடந்தது. அவரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. உடலை மீட்க நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆம்பூர், 

மாதனூரை அடுத்த தோட்டாளம் மற்றும் பாலூர் இடையே வனப்பகுதியை யொட்டி வனத்துறையினர் கால்வாய் ஒன்றை வெட்டி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் அந்த வழியாக ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை கண்டு அருகில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு பெண் உடல் புதைக்கப்பட்டு, அவரது சேலை மற்றும் காலின் ஒரு பகுதி வெளியே தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பெண் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சாராய பாக்கெட்டுகள் மற்றும் ஒரு ஜோடி காலணி இருப்பதை கண்டனர். இரவு நேரம் ஆனதால் உடலை மீட்க இயலாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக அந்த பகுதியில் மின்விளக்கு அமைக்கப்பட்டது. மேலும் உடலின் அருகே போலீசாரும், வனத்துறையினரும், வருவாய்த்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை கைரேகை நிபுணர் விஜய், அவரது குழுவினர் வந்து காலணி, சாராய பாக்கெட்டுகளை மீட்டனர். ஆனால் மதியம் வரை பெண்ணின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மாதனூர் - பாலூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அண்ணாதுரை என்பவர் தனது மனைவி செல்வி (வயது 40) கடந்த சனிக்கிழமை மாதனூரில் நடந்த சந்தைக்கு சென்று வருவதாக கூறி, தன்னிடம் ரூ.650 வாங்கிக்கொண்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என போலீசாரிடம் கூறினார்.

அதைத்தொடர்ந்து ஆம்பூர் தாசில்தார் சுஜாதா முன்னிலையில் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. மேலும் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் முகம் சேலையால் இறுக்கப்பட்டும், தலை நசுங்கியும் இருந்தது.

இதனையடுத்து அழுகிய நிலையில் கிடந்த உடலை அண்ணாதுரை, அவரது மகன் ஆனந்தராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அது செல்வி என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அழுகிய நிலையில் இருந்த உடலை வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் நாகேந்திரகுமார், பிரபு குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் செல்வியின் உடல் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வி ஆம்பூர் அருகே உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும், அதே கம்பெனியில் வேலை செய்து வந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக மாதனூரை சேர்ந்த அந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story