நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு சரிபார்ப்பு


நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு சரிபார்ப்பு
x
தினத்தந்தி 4 April 2019 4:45 AM IST (Updated: 3 April 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகள் நேற்று செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.

நாமக்கல், 

வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது அவர்களுக்கு தினந்தோறும் செலவு கணக்கு விவரங்களை பராமரிக்க தேர்தல் ஆணையத்தால் பதிவேடுகள் வழங்கப்பட்டன. மேலும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு செலவுகளையும் அதற்குரிய ஆவணங்களுடன் மேற்கொள்ளவும், வேட்பாளர்கள் தேர்தலுக்காக செய்யும் செலவுகளுக்காக தனியாக ஒரு வங்கி கணக்கு தொடங்கி, அந்த வங்கி கணக்கின் மூலமாகவே அனைத்து செலவுகளையும் வரைவோலை அல்லது காசோலைகள் மூலமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

உதவி செலவின பார்வையாளர்கள் பராமரித்து வரும் நிழற்பதிவேடுகளில் உள்ள வேட்பாளர்களின் செலவு கணக்கு விவரங்களை, வேட்பாளர்கள் பராமரித்து வரும் செலவு விவர பதிவேடுகளுடன் குறிப்பிட்ட நாட்களில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் சம்மந்தப்பட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களுடைய முகவர்களுடன் சரிபார்க்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

அதன் அடிப்படையில் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர்கள் மயூர் காம்ளே, ராஜேஸ் ஆகியோர் செலவு கணக்குகள் அடங்கிய விவர பதிவேடுகளை பார்வையிட்டு சரிபார்த்தனர்.

மேலும், வேட்பாளர்களின் தேர்தல் செலவு விவர பதிவேடுகள் வருகிற 9 மற்றும் 15-ந் தேதிகளில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பு அலுவலர்நந்தகுமார் மற்றும் உதவி செலவின பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story