விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 5 ஆண்டு சிறை - விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு


விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 5 ஆண்டு சிறை - விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 4 April 2019 4:15 AM IST (Updated: 3 April 2019 11:30 PM IST)
t-max-icont-min-icon

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பிரிதிவிமங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அன்வர்ஷெரீப் (வயது 48), விவசாயி. இவருடைய வீட்டின் அருகே உள்ள இடத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த 12.8.2006 அன்று கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள நில அளவைத்துறையில் சார் ஆய்வாளராக பணியாற்றி வந்த சுப்பிரமணியம் (51) என்பவரை அணுகி இடத்தை அளவீடு செய்து தரும்படி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் இடத்தை அளவீடு செய்து தர வேண்டுமென்றால் ரூ.2,500-ஐ லஞ்சமாக தர வேண்டும் என்றும், இந்த பணத்தை தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து தன்னிடம் நேரில் கொடுக்கும்படியும் கறாராக கூறினார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்வர்ஷெரீப், இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை அன்வர்ஷெரீப் எடுத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த சுப்பிரமணியத்திடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது சுப்பிரமணியத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்பிறகு இவ்வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. இதனிடையே சுப்பிரமணியம், பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இதனை தொடர்ந்து சுப்பிரமணியம், சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story