என்ஜினில் கோளாறு மலைரெயில் நடுவழியில் நின்றது - சுற்றுலா பயணிகள் அவதி
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இயக்கப்பட்ட மலை ரெயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் நடுவழியில் நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
குன்னூர்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமாகவும் மலைரெயில் இயக்கப்படுகிறது. பழமை வாய்ந்த ஊட்டி மலைரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னமாக அறிவித்து உள்ளது.
தினமும் காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 4 பெட்டிகளுடன் புறப்படும் மலைரெயில், குன்னூரை 10.30 மணிக்கு வந்தடைகிறது. இங்கு டீசல் என்ஜின் மாற்றப்பட்டு கூடுதலாக ஒரு பெட்டியுடன் காலை 10.40 மணிக்கு ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டு செல்கிறது.
இந்த நிலையில் நேற்று காலை 7.15 மணிக்கு வழக்கம்போல் 204 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூரை நோக்கி மலைரெயில் புறப்பட்டு சென்றது. காலை 9 மணியளவில் அடர்லி-ஹில்குரோவ் இடையே திடீரென மலைரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது. இதுகுறித்து குன்னூர் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்று மலைரெயில் கொண்டு வரப்பட்டது. அதில் சுற்றுலா பயணிகள் ஏற்றப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மதியம் 1.45 மணிக்கு தாமதமாக மலைரெயில் குன்னூரை அடைந்தது. பின்னர் 1.55 மணிக்கு டீசல் என்ஜின் மாற்றப்பட்டு, ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. மலைரெயில் தாமதம் காரணமாக சுற்றுலா பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story