ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.6¼ லட்சம் பறிமுதல்


ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.6¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 4 April 2019 3:45 AM IST (Updated: 4 April 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.6¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படுகிறது.

ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 200 இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கர்நாடக மாநிலம் கார்மே‌ஷன் டவுன் பகுதியை சேர்ந்த நையாஷ் அகமது (51) என்பதும், தைலம் தயாரிக்கும் ஆலை உரிமையாளரான இவர், கொடுமுடியில் நார் உரிக்கும் எந்திரம் வாங்குவதற்காக வந்ததும், அவர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் கொடுமுடி அருகே உள்ள ஒத்தக்கடை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சதீஷ் என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 610 பறிமுதல் செய்யப்பட்டது.

கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாதவன் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 640 கொண்டு சென்ற சுரேஷ் என்பவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் மொடக்குறிச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சேகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரி சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பெத்தாம்பாளையத்தை சேர்ந்த பிரம்மா இலியாஸ் குட்டி (வயது 36) என்பவர் அந்தியூர் அருகே உள்ள பர்கூருக்கு வாழைக்காய்கள் வாங்க ரூ.75 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரியவந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 லட்சத்து 29 ஆயிரத்து 950 சிக்கியது.

1 More update

Next Story