‘தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குகளை பிரிக்க மிகப்பெரிய கூட்டம் அலைகிறது’ பிரேமலதா பிரசாரம்


‘தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குகளை பிரிக்க மிகப்பெரிய கூட்டம் அலைகிறது’ பிரேமலதா பிரசாரம்
x
தினத்தந்தி 4 April 2019 4:45 AM IST (Updated: 4 April 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

‘தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குகளை பிரிக்க மிகப்பெரிய கூட்டம் அலைந்து கொண்டு இருக்கிறது’ என்று சீர்காழியில் பிரேமலதா பிரசாரம் செய்தார்.

சீர்காழி,

தே.மு.தி.க. மாநில பொருளாளர் பிரேமலதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சீர்காழி பகுதியில் தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாரதி எம்.எல்.ஏ. புத்தூரில் சுமார் ரூ.26 கோடி செலவில் அரசு கலை கல்லூரியை கொண்டு வந்து உள்ளார். தற்காசில் ரூ.10 கோடி செலவில் கிட்டி அணை கட்டப்பட்டுள்ளது. ரூ.2 கோடி செலவில் சீர்காழியில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இதேபோல் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் ஆசைமணி வெற்றி பெற்றால் கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் புகாத வகையில் தடுப்பணையும், வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் தடுப்பணையும் கட்டப்படும். பனங்காட்டாங்குடி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் புறவழிச்சாலை ஏற்படுத்தப்படும். இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப் படும்.

இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. மக்கள் கூட்டணி, ஒட்டு மொத்த தமிழக மக்களின் ஆதரவு பெற்ற கூட்டணி. இந்த கூட்டணி அமையக்கூடாது என்பதற்காக தி.மு.க.வினர் எத்தனையோ சூழ்ச்சிகளை செய்தார்கள். அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து தேசிய ஜனநாயக கூட்டணி மெகா கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு தருகின்றனர். நமது கூட்டணி நரேந்திர மோடியை முன்னிறுத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. நமது 40 வேட்பாளர்களும் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் உறுதியாக பெற்று வருவார்கள்.

தமிழகம் விவசாயம் சார்ந்த பூமி. விவசாயம் சரியாக இருந்தால் தான் தமிழகம் நன்றாக இருக்கும். அதனால் முதல் கோரிக்கையாக நதிநீர் இணைப்பு தான் இருக்கும். நல்ல சாலை வசதி, குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். இதனால் அனைவரும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். ஓட்டை பிரிப்பதற்காக இங்கு மிகப்பெரிய கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. இது உங்களுக்கு தெரியும்.

தஞ்சை, நாகை, திருவாரூர் பகுதியில் ஓட்டை பிரிப்பதற்கு ஒரு அணி செயல்படுகிறது. எனவே மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆசைமணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பாரதி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தே.மு.தி.க மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நாகையில் நேற்று இரவு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தாழை. சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

Next Story