வாக்குச்சாவடிகளில் சிறப்பு வசதி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் கலெக்டர் பேச்சு


வாக்குச்சாவடிகளில் சிறப்பு வசதி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2019 4:30 AM IST (Updated: 4 April 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடிகளில் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது என்றும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்றும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா தலைமை தாங்கி பேசியதாவது:–

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில், மாற்றுத்திறனாளிகளின் பெயர் இடம்பெற்றுள்ள விவரம் பெறப்பட்டு உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அனைத்து வசதிகளும் செய்து தர மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கென தேர்தல் ஆணையத்தால் செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சக்கர நாற்காலி தேவையெனில் அதனை இந்த செயலி மூலம் தெரிவித்தால் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம், மாற்றுத்திறனாளிகள் சென்று வாக்குப்பதிவு செய்ய சாய்வுதளம் தேவையான அளவு சக்கர நாற்காலி வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பார்வையற்றோர் வாக்களிப்பதற்கு வசதியாக ‘பிரெய்லி’ முறையையும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.


Next Story