தெருவுக்குள் சாமி ஊர்வலம் வர அனுமதி மறுப்பு தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு


தெருவுக்குள் சாமி ஊர்வலம் வர அனுமதி மறுப்பு தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
x
தினத்தந்தி 3 April 2019 11:00 PM GMT (Updated: 3 April 2019 7:48 PM GMT)

தெருவுக்குள் சாமி ஊர்வலம் வர அனுமதி மறுக்கப்பட்டதால் கும்பகோணம் அருகே தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

கும்பகோணம்,

கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் கிராமத்தில் செல்வமகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் ஆண்டுதோறும் முன்னோட்டம் பின்னோட்டம் என்ற சாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்த விழாவில் அந்த பகுதியில் வசிக்கும் அனைத்து சமூகத்தினரும் ஒருங்கிணைந்து ஊரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சாமியை தூக்கி செல்வது வழக்கம்.இந்த ஆண்டுக்கான விழாவில் இன்று (வியாழக்கிழமை) முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்தநிலையில் உடையாளூர் அருகே உள்ள அண்ணா நகர், காங்கேயன்பேட்டை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது தெருவுக்குள் சாமியை ஊர்வலமாக கொண்டுவர வேண்டும் என அற நிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அறநிலையத்துறை அதிகாரிகள் வழக்கமாக சாமி புறப்பட்டு செல்லும் தெருக்களில் மட்டுமே இந்த ஆண்டும் சாமி ஊர்வலம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.தங்கள் தெருவுக்குள் சாமி ஊர்வலம் வர அனுமதி மறுக்கப் பட்டதால் ஆத்திரமடைந்த அண்ணாநகர், காங்கேயன்பேட்டை பகுதி பொதுமக்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க முடிவுசெய்துள்ளனர். மேலும் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கூறி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story