மணல் லாரியின் பாரம் தாங்காமல் இடிந்தது கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயம்
மணல் லாரியின் பாரம் தாங்காமல் கான்கிரீட் தளம் இடிந்ததில் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை,
செம்பூர் வாஷிநாக்காவில் உள்ள நாகாபாபா நகர் மகாடா காலனி பகுதியில் நூலக கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக நேற்று மணல் ஏற்றிக் கொண்டு கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு லாரி ஒன்று வந்தது.
அந்த லாரி அங்கு பூமிக்கடியில் உள்ள கழிவுநீர் தொட்டியின் கான்கிரீட் தளம் மீது ஏறியது. அப்போது பாரம் தாங்காமல் திடீரென கழிவுநீர் தொட்டியின் கான்கிரீட் தளம் இடிந்தது.
இதில் லாரியின் பின்பகுதி கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கியது. மேலும் லாரியின் அருகே அந்த கான்கிரீட் தளத்தில் நின்று கொண்டிருந்த பெண் மற்றும் 2 குழந்தைகள் இடிபாடுகளுடன் கழிவு நீர் தொட்டி உள்ளே விழுந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். உடனடியாக இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து படுகாயங்களுடன் கிடந்த குழந்தைகள் உள்பட 3 பேரையும் மீட்டு காட்கோபரில் உள்ள ராஜவாடி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக சம்பவம் நடந்த இடத்தை தென்மத்திய மும்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏக்நாத் கெய்வாட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story