பெற்றோர்கள், பொதுமக்கள் சார்பில் அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர்


பெற்றோர்கள், பொதுமக்கள் சார்பில் அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர்
x
தினத்தந்தி 4 April 2019 4:00 AM IST (Updated: 4 April 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கப்பட்டது.

ஆவூர்,

விராலிமலை ஒன்றியம், ஆவூர் அருகே உள்ள செங்களாக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பேசினார். ஆசிரியை கிருஸ்டினா ரபெல்லா வரவேற்றார். ஆவூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சிவமூர்த்தி, துரைராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் பள்ளிக்கு தேவையான பீரோ, மேஜை, நாற்காலிகள், குடம், எழுது பொருட்கள், குடிநீர் தொட்டி, தலைவர்களின் படங்கள் உள்ளிட்ட பொருட்களை மேள தாளம் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவற்றை பள்ளி தலைமை ஆசிரியை சகாய ரோஸ்லின் ராணியிடம் வழங்கினர். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் முன்னாள் மாணவர் பழனிவேல் நன்றி கூறினார்.

அண்டக்குளம்

அண்டக்குளம் அருகே வாலியம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு பொதுமக்கள், பெற்றோர்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரேணுகா தலைமை தாங்கினார். தொடர்ந்து பள்ளிக்கு தேவையான மேஜை, பீரோ, டி.வி., நாற்காலி, விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் பொருட்களை பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர். இதில் வட்டார கல்வி அதிகாரி லாரன்ஸ், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஜகுபர் தலைமை தாங்கினார். தொடர்ந்து குன்னூர், வெண்ணாமொழியேந்தல், எட்டிச்சேரி, சிறுகவயல், பள்ளத்திவயல், சேப்ளா வயல், இசைமங்களம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குன்னூர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அண்ணாத்துரை ஆகியோர் மேஜை உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனர். பின்னர் பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். இதில் மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தைலா நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பல்துறை விளக்க கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அதிகாரி ராகவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் உஷாராணி வரவேற்றார். பின்னர் கண்காட்சியில் தங்களின் படைப்புகளை காண்பித்து மாணவர்கள் விளக்கி கூறினர். இதில் வட்டார கல்வி அலுவலர் கருணாகரன், வட்டார மேற்பார்வையாளர் தேவி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக்குழு, கிராம கல்வி குழு நிர்வாகிகள், பெற்றோர்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பெற்றோர்கள் பொதுமக்கள் சார்பில், மேள தாளம் முழுங்க ஊர்வலமாக பள்ளிக்கு தேவையான பீரோ, நாற்காலிகள், ஒலிபெருக்கி, கணினி, டி.வி., சில்வர் குடம், குப்பை தொட்டி, கடிகாரம், மின்விசிறி, கண்ணாடி, விளையாட்டு பொருட்கள், சமையல் பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனர். பின்னர் பொருட்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வீட்டு வசதி சங்க தலைவர் செல்வராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் கோமதிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story