கரூரில் மாதிரி வாக்குப்பதிவு பொதுமக்களுக்கு, அதிகாரிகள் விளக்கம்


கரூரில் மாதிரி வாக்குப்பதிவு பொதுமக்களுக்கு, அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 3 April 2019 11:00 PM GMT (Updated: 3 April 2019 8:38 PM GMT)

கரூரில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திய அதிகாரிகள் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகிற 18-ந்தேதி, வாக்குப்பதிவு நடைபெற இருப்பதையொட்டி 100 சதவீதம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க முன்வர வேண்டும் என்பது பற்றி அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் பற்றி அறியும் வகையிலும், எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்பது பற்றியும், வாக்களிப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்பன உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் வகையில் கரூர் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட கரூர் பஸ் நிலையத்தில் மாதிரி வாக்குசாடிவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு வாக்குச்சாவடி முகவர்கள், 3 நிலையில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்களிப்பதற்கான மறைமுக இடம் மற்றும் அந்த இடத்தில் வாக்குப்பதிவு எந்திரமும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையிலான வி.வி.பேட் எந்திரமும் வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை துணை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான சூர்யபிரகாஷ் மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த்குமார், செலவினபார்வையாளர்கள் மனோஜ்குமார், அம்பாட்கர். தாமோதர் உள்ளிட்டோர் மாதிரி வாக்குசாவடி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் தங்களது ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து வாக்குப்பதிவு அலுவலர்களிடம் ஒப்புதல் பெற்று பின்னர் கையில் மை வைக்கப்பட்ட பிறகு மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதிகாரிகளை தொடர்ந்து, கரூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை பார்வையிட்டு வாக்களிப்பது எப்படி? என்பதை ஆர்வத்துடன் தெரிந்து கொண்டனர். அப்போது பூத் சிலிப்பினை ஆவணமாக கொண்டு வரக்கூடாது. மாறாக வாக்காளர் அடையாள அட்டையை கொண்டுவர முடியாதவர்கள் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட 11 வகையான புகைப்பட ஆவணங்களை கொண்டு வந்து பதிவேட்டில் தங்களது பெயர் உள்ளதா? என சரிபார்த்து ஜனநாயக முறைப்படி தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் எனகூறி வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும், வாக்குச்சாவடிக்குள் சென்றவுடன் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பது குறித்து வாக்காளர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டு, அவர்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. இதில் ஏராளமான வாக்காளர்கள் வருகைதந்து மாதிரி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து அங்கு பஸ்களில் இருந்த பயணிகளிடம் துணை தேர்தல் நடத்தும் அதிகாரி, தேர்தல் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார். முன்னதாக ஒரு பஸ்சின் நடத்துநர் பயணிகளிடம் “ ஏப்ரல் 18-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் நேர்மையுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். நம்முடைய வாக்கு விற்பனைக்கு அல்ல என்று அனைவரும் உறுதியேற்க வேண்டும்” என்று கூறி் விழி்ப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, வட்டாட்சியர்கள் பிரபு(கரூர்), ரவிக்குமார்(மண்மங்கலம்) உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story