மேட்டுப்பாளையம் அருகே, மின்வேலியில் சிக்கி காட்டு யானை சாவு - வனத்துறையினர் விசாரணை


மேட்டுப்பாளையம் அருகே, மின்வேலியில் சிக்கி காட்டு யானை சாவு - வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 4 April 2019 4:15 AM IST (Updated: 4 April 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதி அருகே பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது. இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் தனியார் சிலர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாசர் என்பவரின் வாழைத்தோட்டத்தில் நேற்று காலை காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது.

இதனைகண்ட அப்பகுதி விவசாயிகள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன், வனவர் ராதாகிருஷ்ணன், வனக்காப்பாளர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இறந்து கிடந்த காட்டு யானையின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து விடாமல் இருக்க தோட்டத்தை சுற்றிலும் சூரிய மின்வேலி அமைக்காமல் சட்டத்திற்கு புறம்பாக 12 வோல்ட் திறன்கொண்ட பேட்டரி மூலம் இயங்கும் மின்வேலியை அமைத்து இருந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு உணவைத்தேடி வந்த காட்டு யானை வாழைத்தோட்டத்திற்குள் வரும்போது மின்வேலியில் சிக்கி இறந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைதொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாசந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் மின்வேலி அமைத்திருந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதில் மின்வேலி அமைக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மின்வேலியில் சிக்கி இறந்தது ஆண் காட்டு யானையாகும். இந்த யானைக்கு 10 முதல் 12 வயது வரை இருக்கலாம். பிரேத பரிசோதனைக்கு பின்பு தான் யானை இறந்ததற்கான முழுவிவரம் தெரியவரும். அதன் பின்னர் யானை சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story