‘‘டிக்–டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும்’’ மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


‘‘டிக்–டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும்’’ மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 April 2019 5:00 AM IST (Updated: 4 April 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

டிக்–டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்கவேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த செயலி மூலம் எடுத்த வீடியோக்களை டி.வி.க்களில் ஒளிபரப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

சீனாவில் இருந்து ‘டிக்–டாக்’ என்னும் செயலி 2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 75 மொழிகளில் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2018–ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் ‘டிக்–டாக்’ செயலியை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இதை பயன்படுத்துகிறார்கள். டிக்–டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. பல விபரீத சம்பவங்கள் நடக்க, இந்த ‘டிக்–டாக்’ செயலி காரணமாக அமைந்துள்ளது.

இந்த செயலியை பயன்படுத்திய 400–க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நம் நாட்டின் இளைஞர்களை வளர்ச்சிப்பாதையில் செல்ல விடாமல் தடுத்து, திசை திருப்பும் நோக்கில் சீன நாட்டினர் ‘டிக்–டாக்’ செயலியை இந்தியாவில் பிரபலமாக்கி வருகிறார்கள்.

குறிப்பாக குழந்தைகளை குறி வைத்து ‘டிக்–டாக்’ செயலியை பிரபலமடையச்செய்து வருகிறார்கள். எனவே பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்–டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் ஆஜராகி, ‘‘டிக்–டாக் செயலியால் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதனால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வது அதிகரித்துள்ளது. குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் இந்த செயலியை இணையதளத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் டிக்–டாக் செயலியை தடை செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று வாதாடினார்கள்.

அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. எனவே குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டத்தை நமது நாட்டிலும் ஏன் அமல்படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், ‘‘புளூவேல் (நீல திமிங்கலம்) போன்ற ஆபத்தான விளையாட்டுகளை கோர்ட்டு தலையிட்ட பின்பு தான் மத்திய அரசு தடை செய்தது. அதுபோல சமுதாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கோர்ட்டுதான் தடை விதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அரசே உடனடியாக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்’’ என்றனர்.

அப்போது வக்கீல்கள், ‘‘பிராங்க் ஷோ என்று சொல்லக்கூடிய குறும்பு வீடியோக்களை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியாமல் படம் பிடிப்பதால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. ஒருசிலர் இந்த சம்பவங்களால் அதிர்ச்சியடைந்து உயிரிழந்தும் உள்ளனர். எனவே அதற்கும் தடை விதிக்க வேண்டும்’’ என்று நீதிபதிகளிடம் முறையிட்டனர்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘தமிழகத்தில் பல்வேறு குற்றங்கள் அதிகரிக்க செல்போன் செயலிகள் காரணமாக உள்ளன. டிக்–டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய இந்தோனேஷியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நம் நாட்டில் டிக்–டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். டிக்–டாக் செயலியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோக்களை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது. குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் இணையதள சட்டத்தை நம் நாட்டில் அமல்படுத்துவது குறித்து வருகிற 16–ந்தேதி மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையை வருகிற 16–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story