தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது வருமான வரி சோதனை நடத்தி தேர்தலை நிறுத்த சதி செய்கிறார்கள் - கோவையில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது. வருமான வரி சோதனை நடத்தி தேர்தலை நிறுத்த சதி செய்கிறார்கள் என்று கோவையில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
கோவை,
கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
இந்த தேர்தல் கலைஞர் கருணாநிதி இல்லாமல் நடக்கும் தேர்தல். அவர் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல். கருணாநிதி இருந்திருந்தால் அவர்தான் இந்த மேடையில் உரையாற்றி இருப்பார். அந்த நேரத்தில் அவர் ஒவ்வொருவரையும் சொல்லிவிட்டு கடைசியில் உங்களை சொல்லும் அந்த நேரத்தில் கரகரத்த குரலில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே என்று அன்போடு அழைப்பாரே?. உங்களில் ஒருவனாக, கருணாநிதியின் மகனாக உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்து உள்ளேன்.
இந்த மதசார்பற்ற கூட்டணி என்பது வெறும் தேர்தலுக்காக சேர்ந்திருக்கிறோம் என்று கருத வேண்டிய அவசியம் இல்லை. கொள்கைக்காக சேர்ந்து இருப்பவர்கள் இந்த மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். அரசியலில் லாபங்களுக்காக சேர்ந்தவர்கள் அல்ல. தத்துவங்களுக்காக சேர்ந்து இருப்பவர்கள். நாம் சில ஆண்டுகளாக ஒன்று சேர்ந்து மத்திய ஆட்சியை கண்டித்து, மாநில ஆட்சியை வன்மையாக கண்டித்து பல போராட்டங்களை நடத்தி காட்டி இருக்கிறோம்.
ஆனால் எதிராக அமைந்து உள்ள கூட்டணி கொள்ளைக்கார கூட்டணி. நேற்று வரை ஒருவரை ஒருவர் திட்டியவர்கள் தங்கள் லாபங்களுக்காக ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் விமர்சித்தவர்கள் தேர்தல் ஆதாயத்துக்காக ஒன்று சேர்ந்து உள்ளனர். அவர்கள் நடத்திய பேரங்கள், மிரட்டல்கள், சதிகள் அனைத்தும் நமக்கு நன்றாக தெரியும். நாம் மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் அது தெளிவாக புரிந்து இருக்கிறது. தேர்தலுக்காக சேர்ந்தவர்கள், தேர்தலுக்கு பின் பிரிவார்கள். கொள்ளை கூட்டணியில் அப்படிதான் நடக்கும்.
15 நாட்களாக நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பாதி தமிழகத்தை சுற்றி வந்து உள்ளேன். கடந்த 20-ந் தேதி திருவாரூரில் எனது பயணத்தை தொடங்கினேன். அந்த நேரத்தில் மக்களிடம் கண்ட எழுச்சி, நான் சென்ற அனைத்து இடங்களிலும் காண முடிகிறது. இங்கு கூடி உள்ள உங்கள் முகத்திலும் காண்கிறேன். அது கோவையிலும் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இதே எழுச்சியை காண முடிந்தது.
நாம் 40-க்கு 40 வெற்றியை பெறப்போகிறோம். அதுபோன்று தமிழகத்தில் நடக் கும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் 18-க்கு 18 என்ற வெற்றியை பெறப்போகிறோம். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. நியாயமாக 21 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். 3 தொகுதிகளில் நடத்த முன்வரவில்லை. அதற்கு பின்னணியில் சதி உண்டு. அந்த 3 தொகுதிகளிலும் கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் கோர்ட்டு தேர்தல் நடத்த தடை போடவில்லை. எனவே ஏன் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வரவில்லை?. அங்குதான் சூட்சுமம் இருக்கிறது.
சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. மறைந்துவிட்டார். அதையும் சேர்த்து 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். அதை செய்தால் தி.மு.க. வெற்றி பெற்று மெஜாரிட்டியாக வந்துவிடும். எனவே ஆளும் கட்சியான அ.தி.மு.க. ஆட்சி கவிழும் சூழ்நிலை. எனவேதான் திட்டமிட்ட சூட்சுமத்தை தேர்தல் கமிஷனை பயன்படுத்தி இந்த ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது என நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
2 நாட்களுக்கு முன்பு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும், அவருடைய மகன் நடத்தும் கல்லூரியிலும் வருமானவரித்துறை சோதனை செய்து உள்ளது. ஒரு நாள் முழுவதும் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அதில் எதுவும் சிக்கவில்லை. அன்று துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பிரசாரத்துக்காக வெளியே செல்லவில்லை. எனவே திட்டமிட்டு அவர்கள் இந்த பணியை செய்து இருக்கிறார்கள். முதல் நாளில் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் மறுநாள் சென்று மீண்டும் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்ததாக செய்தியை வெளியிட்டனர்.
பணம் கிடைத்து இருக்கலாம். ஆனால் அந்த பணத்தை நீங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள்?, துரை முருகன் வீட்டிலேயா, அவர் மகன் நடத்தும் கல்லூரியிலேயா. யாருடைய வீட்டிலேயோ எடுத்துவிட்டு துரைமுருகனை சம்பந்தப்படுத்தி பேசுகிறீர்களே?. அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்த சதி நடந்து உள்ளது. அந்த நாடாளுமன்ற தொகுதியில் ஆம்பூர், குடியாத்தம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. அதை நிறுத்திவிடலாம் என்று திட்டமிட்டு அந்த பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தொடரும் என்று சொன்னால் தி.மு.க. மட்டுமல்ல, எங்களோடு சேர்ந்து இருக்கிற கூட்டணி கட்சி வேடிக்கை பார்க்காது.
வருமானவரித்துறை சோதனை நடத்த முறையான தாக்கீது அனுப்பி முறையாக சோதனை நடந்ததா என்று கேட்டோம். காவல்துறையில் வந்த புகாரின் அடிப்படையில் சோதனை செய்தோம் என்று சொல்கிறார்கள். யார் புகார் கொடுத்தாலும் சோதனை செய்வீர்களா?. மோடி வீட்டில் கோடி கோடியாக பணம் உள்ளது என்று நான் இப்போது சொல்கிறேன். அங்கு உங்களால் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்ய முடியுமா? முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பணம் இருக்கிறது. துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் பணம் இருக்கிறது, உங்களால் சோதனை செய்ய முடியுமா?.
ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்காக வீடு வீடாக பணம் கொடுப்பது புகைப் படமாக இருக்கிறது. அங்கு ஏன்? சோதனை செய்யவில்லை. யார் புகார் செய்தாலும் சோதனை செய்வோம் என்று கூறுபவர்கள், ஏன் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை செய்யவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் சோதனை நடந்தது. அவர் கோவை மாவட்ட அமைச்சரான எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டியவர். அவருடைய வீட்டில் ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது யார் பணம். வேலுமணி தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்தது என்று நான் சொல்கிறேன். நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் தயாரா?.
மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழகத்தில் பா.ஜனதா தோற்பது மட்டுமல்ல டெபாசிட் இழக்க போகிறது என்ற செய்தி உளவுத்துறை மூலம் மோடிக்கு போய்விட்டது. அதுதான் உண்மை. அதனால்தான் திசை திருப்பி கலவரத்தை ஏற்படுத்தும் நிலையில்தான் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
நீங்கள் தலைகீழாக நின்றாலும், ரோட்டில் உருண்டு புரண்டாலும் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது. மோடி ‘கோ பேக்’ என்று சொன்ன முதல் மாநிலம் தமிழகம். பா.ஜனதா தலைவர் அமித்ஷா சோளிங்கரில் பிரசாரம் செய்ததை நான் டி.வி.யில் பார்த்தேன். அங்கு 300 பேர் கூட இல்லை. மேடையில்தான் அதிகம்பேர் இருந்தனர். அதில் பேசிய அமித்ஷா உங்கள் ஓட்டு தாமரைக்குதானே என்று கேட்டார். அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. மேடையில் இருந்தவர்களிடமும் பதில் இல்லை. அதை பா.ஜனதா புரிந்து கொள்ள வேண்டும்.
வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு இரட்டை லாபம் என்று கூறிய மோடி அது குறித்து பேசவில்லை. கருப்பு பணத்தை மீட்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அதை மீட்கவில்லை. மோடி டி என்ற ஆங்கில எழுத்தை வைத்து 5 கொள்கையை வெளியிட்டார். அதாவது திறமை, வர்த்தகம், பாரம்பரியம், சுற்றுலா, தொழில்நுட்பம் இந்த 5 தான் எனக்கு முக்கியம் என்று அவர் சொன்னார்.
ஆனால் அதில் ஒன்றாவது அவர் செய்தாரா?. விலைவாசி உயர்வைகூட கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் புலனாய்வு அமைப்பை தனது தனிப்பட்ட விஷயத்துக்காக பயன்படுத்துகிறார். அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என்று கூறினார். ஆனால் கல்வெட்டுதான் உருவாக்கி உள்ளார்.
மோடி ஆட்சியில் நாடு விடியவில்லை. தொடர்ந்து அவரை ஆட்சியில் வைத்தால் நாட்டில் விடிவுகாலம் ஏற்படாது. மோடி மீண்டும் வந்துவிட்டால் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடுவோம். இது சாதாரண தேர்தல் இல்லை. இனிமேல் தேர்தல் நடக்குமா, நடக்காதா என்று தீர்மானிக்கும் தேர்தல். மோடி மீண்டும் வந்துவிட்டால் தேர்தல் என்பதே மறந்து விடும்.
தொழில் நகரத்தில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யார்? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை. அந்த கட்டுரையில் சிறு சிறு குறிப்புகள். மின்வெட்டு. ஜி.எஸ்.டி. பிரச்சினை. தொழிற்சாலைகள் மூடியிருக்கும் நிலைமை. வேலையிழப்பு. ஜவுளி தொழில் நசிந்து போயிருக்கு. கிரைண்டர்கள் தயாரிக்கும் கூடங்கள் மூடப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் மேம்பாலங்கள் கிடையாது. விமான நிலைய விரிவாக்கம் நிறைவு பெறாத நிலைமை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான பிரச்சினை. அது தான் பொள்ளாச்சி பிரச்சினை.
கோவையில் நான் தங்கியிருந்த இடத்துக்கு 2 பெண் போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்கள். நான் வெளியே வந்த போது அவர்கள் என்னிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். உடனே நான் வந்து போஸ் கொடுத்தேன். அவர்களிடம் ஒரு மரியாதைக்கு எந்த ஊர் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் வெட்கப்பட்டு அப்படியே திரும்பி கொண்டனர். மெல்லிய குரலில் பொள்ளாச்சி என்றனர்.
பொள்ளாச்சி என்று சொல்வதற்கே வெட்கப்படக்கூடிய சூழ்நிலை இப்போது நாட்டில் உள்ளது. பொள்ளாச்சியில் நடந்தது என்ன?. 200-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சீரழிக்கப்பட்டனர். அது இன்று நேற்றா நடந்தது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக நடந்தது. நடந்து கொண்டிருக்க கூடிய ஒரு கொடுமை. பெண்களை பலவந்தப்படுத்தி பல வீடுகளில், தோட்டங்களில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை புகைப்படம், வீடியோ எடுத்து அதற்கு பிறகு அவர்களுக்கு அதை அனுப்பி மிரட்டி கோடி கோடியாக பணம் சம்பாதித்துள்ளனர். இதற்கு பின்னணி யார்? துணை சபாநாயகராக இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன். அவருடைய மகன் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று ஆதாரத்துடன் செய்திகள் வந்தன. சில பெண்களை காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு கடத்திச்சென்று போகிற போது ஒரு பெண் தப்பித்து காரின் கதவை திறந்து கீழே விழுந்து அந்த இடத்திலேயே இறந்து போயிருக்கிறார்.
அப்போது அந்த காரில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் இருந்திருக்கிறார் என்ற செய்தி ஆதாரத்துடன் வந்திருக்கிறது. இது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. முறையான புகார்கள் வந்தால் அதை போலீசார் எடுப்பதில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் புகார் தந்திருக்கிறார். புகார் தந்த நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் 50 பெண்களின் மானத்தை காப்பாற்றியிருக்க முடியும். அவர்களை நிச்சயம் காப்பாற்றி கரை சேர்த்திருக்க முடியும். ஆனால் எதை பற்றியும் கவலைப்படவில்லை. இன்றைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்த ஆட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. நான் கேட்கிறேன். 7 ஆண்டுகளாக அங்கு போலீசே இல்லையா?. ஆட்சி என்பதே காணாமல்போய் விட்டதா?. ஆக பாதுகாப்புக்கு இருக்க வேண்டியவர்கள் இந்த குற்றத்துக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். பக்க பலமாக இருக்கிறார்களே தவிர, அதற்குரிய நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை. இது தான் இன்றைக்கு இருக்கும் நிலைமை.
இதையெல்லாம் நாங்கள் வெளியே சொல்கிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். போல திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்கிறார். போகிற இடத்தில் என்ன பிரசாரம் செய்கிறார் என்றால், தூத்துக்குடியில் என்னை மையப்படுத்தி பேசி இருக்கிறார். அதற்கு காரணம் கோடநாடு பிரச்சினை பற்றி நான் பேசுகிறேன். பொள்ளாச்சி பிரச்சினையை நாங்கள் வெளிப்படையாக பிரசாரம் செய்கிறோம். அந்த ஆத்திரம் தாங்க முடியாமல் என் மீது பல வழக்குகள் இருக்கிறது. அதையெல்லாம் மீண்டும் எடுப்பேன் என்கிறார். அண்ணா நகர் ரமேஷ் என்ற என் நண்பர் ஒருவர் தனது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார். எப்போது? 2001-ம் ஆண்டு. ஆக அந்த நேரத்தில் இதைப்பற்றி ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சட்டசபையில் நான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது பேசியிருக்கிறார்.
நான் உடனடியாக எழுந்து என் மீது எந்த குற்றமும் கிடையாது. வேண்டுமென்றால் எந்த விசாரணையும் வையுங் கள். அதை சந்திக்க நான்தயார் என்று அன்றைக்கே சொன்னேன். உங்கள் அம்மாவிடமே நான் சொல்லி விட்டேன். இப்போது நீங்கள் பிரசாரத்தில் அந்த வழக்கை எடுப்பேன். உள்ளே தள்ளுவேன் என்று சொல்கிறீர்கள்.
நான் கேட்கிறேன். 2016-ல் ஆட்சிக்கு வந்தீர்கள். ஜெயலலிதா தான் பொறுப்பேற்றார். அவருக்கு பின் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள். 8 ஆண்டுகளாக நீங்கள் தான் ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. என் மீது தவறு இருந்திருந்தால் உங்களுக்கு தெம்பு இருந்தால், ஆண்மை இருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?. உங்கள் மீது உள்ள களங்கத்திற்காக இப்போது போய் திசை திருப்பு கிறீர்களே.
இப்போதும் நீங்கள் தான் முதல்-அமைச்சர். வழக்கு போடுங்கள். நான் தயார். நான் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன். எனவே செய்ததை எல்லாம் செய்து விட்டு கொள்ளையடித்து விட்டு இப்போது மக்களிடம் வந்து ஓட்டு கேட்கிறீர்களே. மக்கள் இன்று தெளிவாக இருக்கிறார்கள். நல்ல தீர்ப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். அந்த நிலையில் தான் இன்றைக்கு கோவை நாடாளுமன்ற தேர்தல் வாயிலாக நான் உங்களை கேட்டுக் கொள்வதெல்லாம் இங்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர். நடராஜனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனித நேய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.
Related Tags :
Next Story






