“சிறுபான்மையினர் பற்றி பேச தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு தகுதி இல்லை” ஜி.கே.வாசன் பேச்சு
“சிறுபான்மையினர் பற்றி பேச தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு தகுதி இல்லை“ என்று வள்ளியூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.
வள்ளியூர்,
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வள்ளியூர் காமராஜர் சிலை அருகே திறந்த வேனில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மனோஜ்பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வதன் மூலம், தமிழகத்தின் வளர்ச்சியை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். மத்தியில் மோடியின் ஆட்சி தொடர வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கட்சியுடைய ஆட்சி வரவேண்டும். அப்போதுதான் வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி, தாமதமின்றி கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்பு இருக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
இதனால் ஏழை எளிய மக்கள், சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மகளிர், இளைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், வியாபாரிகள் என அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இந்த தேர்தல் அமைய வேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள்.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரையில் மக்கள் வெறுக்கின்ற கூட்டணியாகத்தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதற்கு மாறாக அ.தி.மு.க கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக, தொடர்ந்து திட்டங்களை கொடுக்கக்கூடிய கூட்டணியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. காங்கிரஸ், தி.மு.க கூட்டணிக்கு சிறுபான்மையினரை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. 9 நாடாளுமன்ற தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுக்கொண்டு ஒரு தொகுதியில் கூட சிறுபான்மையினருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதன்மூலம் சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழக மக்கள் இனிமேலும் ஏமாற தயாராக இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து காமராஜர் சிலைக்கு ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, நாகர்கோவிலில் இருந்து வள்ளியூருக்கு வருகை தந்த ஜி.கே.வாசனுக்கு, த.மா.கா. மாவட்ட தலைவர் ஜோதி தலைமையில் கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இதில் த.மா.கா மாவட்ட தலைவர்கள் அய்யாதுரை, சுத்தமல்லி முருகேசன், மாநில செயலாளர்கள் ஜிந்தா சுப்பிரமணியன், சரவணன், துணைச்செயலாளர்கள் மாரித்துரை, புஷ்பலட்சுமி கனகராஜ், வள்ளியூர் நகர செயலாளர் யூக்ளின் ஐன்ஸ்டின், அ.தி.மு.க வள்ளியூர் நகர செயலாளர் பொன்னரசு, துணை செயலாளர் கல்யாணசுந்தரம், பா.ஜ.க மாவட்ட பொதுசெயலாளர் தமிழ்செல்வன், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலாஜி, வள்ளியூர் நகர தலைவர் செல்வகுமார், தே.மு.தி.க ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விஜி வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story