காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு, பள்ளிக்கூட கழிப்பறையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளிக்கூட கழிப்பறையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி மெய்யத்தூரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 39). உப்பு வியாபாரி. இவரது 2-வது மகள் துர்கா தேவி (13). இவள் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
வீட்டின் அருகே பள்ளிக்கூடம் இருந்ததால், கடந்த சில நாட்களாக தினமும் காலை பள்ளியை மாணவி துர்காதேவி தான் திறந்து வைப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை 8.15 மணிக்கு வீட்டில் இருந்து பெற்றோரிடம் பள்ளிக்கூடத்திற்கு செல்வதாக கூறிவிட்டு துர்காதேவி புறப்பட்டாள். பள்ளிக்கூடத்திற்கு சென்ற அவள், 8.30 மணிக்கு நுழைவு வாயில், வகுப்பறை கட்டிடங்கள், தலைமை ஆசிரியர் அறை மற்றும் கழிப்பறையை திறந்துள்ளாள். பின்னர் கழிப்பறைக்கு சென்ற அவள், திடீரென துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
இந்த நிலையில் பள்ளிக்கு வழக்கம் போல் மாணவ-மாணவிகள் வர தொடங்கினர். சில மாணவிகள் கழிப்பறைக்கு சென்ற போது, அங்கு துர்காதேவி பிணமாக தொங்கியதை கண்டு அலறி கூச்சலிட்டனர். இந்த சத்தம்கேட்ட ஆசிரியர்கள் விரைந்து வந்து பார்த்த போது, மாணவி துர்காதேவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து குமராட்சி போலீசார் மற்றும் துர்காதேவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துர்காதேவியின் பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் மாணவி தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
இதையடுத்து துர்காதேவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து தினமும் பள்ளியை திறப்பதால் ஏற்பட்ட மனஉளைச்சலால் துர்காதேவி தற்கொலை செய்து கொண்டாளா? அல்லது ஆசிரியர்கள், பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாளா? என விசாரணை நடத்தி வருகிறார்.
பள்ளிக்கூட கழிப்பறையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story