பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தி போலீசார் கொடி அணிவகுப்பு

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 3,234 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இவற்றில் 161 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 91 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் அமைதியாக நடைபெறவும், வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றலாம் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 போலீஸ் உட்கோட்டங்களிலும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
விழுப்புரம் உட்கோட்டத்திற்குட்பட்ட விழுப்புரம் வழுதரெட்டி, பிடாகம் ஆகிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையிலும், உளுந்தூர்பேட்டை உட்கோட்டம் திருவெண்ணெய்நல்லூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர் தலைமையிலும், கோட்டக்குப்பத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையிலும், செஞ்சி உட்கோட்டம் கெடாரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் தலைமையிலும், கள்ளக்குறிச்சி தேரடி வீதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலும், திண்டிவனம் நகரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையிலும், திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலும் போலீசார், துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு கவசங்களுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
Related Tags :
Next Story






