துரைமுருகன் வீட்டில் நடத்தியதைபோல் அ.தி.மு.க. அமைச்சர்களின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தவில்லை? கே.எஸ்.அழகிரி கேள்வி


துரைமுருகன் வீட்டில் நடத்தியதைபோல் அ.தி.மு.க. அமைச்சர்களின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தவில்லை? கே.எஸ்.அழகிரி கேள்வி
x
தினத்தந்தி 4 April 2019 4:30 AM IST (Updated: 4 April 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தியதைபோல் அ.தி.மு.க. அமைச்சர்களின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தவில்லை? என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பீமநகர் செடல்மாரியம்மன் கோவில் திடல் அருகே நேற்று மாலை நடந்தது. காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, திருச்சி தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுவர் நன்கு பேசக்கூடியவராகவும், சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்று மக்கள் பிரச்சினை பற்றி பேசியவராகவும் இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் அந்த தகுதி உடையவர். ஆனால் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடுபவருக்கு அந்த தகுதி இருக்கிறதா? என்று எண்ணி பார்க்க வேண்டும். இங்கு ஜனநாயகம் பலவீனமாகவும், பணநாயகம் பலமாகவும் இருக்கிறது. தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு. கடந்த ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் பல தோல்விகளை சந்தித்துள்ளது.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக வாகன சோதனை நடத்தி வியாபாரிகளிடம் பணம் பறிமுதல் செய்வார்கள். வங்கிகளுக்கு கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்வார்கள். பெண்கள் கொண்டு செல்லும் நகைகளை பறிமுதல் செய்வார்கள். ஆனால் தேர்தலுக்கு முந்தைய கடைசி 2 நாட்கள் கண்டுகொள்ளாமல் இருந்து விடுவார்கள். துரை முருகன் பல ஆண்டுகாலமாக அமைச்சராக இருந்தவர். அவரது மகன் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருடைய வெற்றி வாய்ப்பை தடுக்க அவரது வீட்டில் ஒருநாள் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.

தமிழகத்தில் துரைமுருகன் வீட்டில் மட்டும் ஏன் சோதனை நடத்துகிறார்கள். அவர் வீட்டில் நடத்தியதைபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என அ.தி.மு.க. அமைச்சர்கள் எல்லோருடைய வீடுகளிலும் சோதனை நடத்தலாம். அங்கெல்லாம் சோதனை நடத்தாமல் துரைமுருகன் வீட்டில் மட்டும் சோதனை நடத்தி அவர்களை தேர்தலில் தோல்வி அடைய செய்ய அனைத்து வேலைகளும் செய்யப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு ஒரு அளவுகோல், எதிர்க்கட்சிக்கு ஒரு அளவுகோல் என தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை சார்பில் தேர்தல் ஆணையத்தை எச்சரிக்கிறேன். தேர்தல் ஆணையம் இதுபோன்று ஒரு சார்பான நிலை எடுத்தால் வருங்காலத்தில் அதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள். அதிகாரம் ஓரிடத்தில் மட்டும் இருக்காது. அது எல்லோருடைய கைகளுக்கும் வரும். அதனால் அதிகாரிகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. மாநில அரசுகள் விரும்பினால் நீட்தேர்வை வைத்து கொள்ளலாம் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இது கோடானகோடி தமிழக மாணவர்களுக்கு கிடைத்துள்ள அற்புத வாய்ப்பு.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட தலைவர் கலை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story