விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து; 4 பேர் படுகாயம் 3 அறைகள் தரைமட்டமாயின
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டம் ஆனது. 4 பேர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள பொம்மையாபுரத்தில் சிவகாசி ஆலமரத்துபட்டியை சேர்ந்த பாலாஜி (வயது 45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிப்பிற்கான 85 அறைகள் உள்ளன. நேற்று இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு பணி நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் மாலை 6 மணியளவில் மருந்து கலக்கிக்கொண்டிருந்த ஒரு அறையில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அடுத்தடுத்து இருந்த 3 அறைகள் தீயில் வெடித்துச் சிதறி தரைமட்டம் ஆயின. தகவல் அறிந்து சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டையில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இடிபாடுகளில் சிக்கிய திருத்தங்கல்லைச் சேர்ந்த ரூபன் (வயது 42), ஏ.கல்லுப்பட்டியை சேர்ந்த மாடசாமி (60), போடம்பட்டியை சேர்ந்த மதுரை வீரன் (36) ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். மேலும் போடம்பட்டியைச் சேர்ந்த கடவுள் (40) என்பவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவருக்கு 60 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரும், படுகாயமடைந்த ரூபனும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற இருவரும் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வெடிவிபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.