திருச்சியில் சாலைப்பணியாளர்கள் தொடர் முழக்க போராட்டம்


திருச்சியில் சாலைப்பணியாளர்கள் தொடர் முழக்க போராட்டம்
x
தினத்தந்தி 3 April 2019 11:00 PM GMT (Updated: 3 April 2019 8:58 PM GMT)

திருச்சியில் சாலைப்பணியாளர்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் சாலைப்பணியாளர்களுக்கு அரசு விதிகளின்படி, வழங்கப்பட வேண்டிய உரிமைகளை வழங்க மறுக்கும் திருச்சி உதவி கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது சேம நலநிதி கணக்கில் கடன் கோரும் சாலைப்பணியாளர்களுக்கு பரிந்துரை செய்ய மறுத்தும், சாலைப்பணியாளர்களை கந்துவட்டி கொடுமைக்கு தள்ளும் நோக்கில் செயல்படுவதை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அம்சராஜ், செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் சண்முகம், துணைத்தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக்கு எதிராக கோஷமிட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இதைத்தொடர்ந்து சாலைப்பணியாளர் சங்க நிர்வாகிகளுடன் உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார், உதவி பொறியாளர் வீரமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலைப்பணியாளர்களுக்கு வேண்டிய சலுகைகள் முறைப்படி கிடைக்க ஆவன செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story