‘இந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான்’ எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
இந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான் என்று சிவகங்கை தேர்தல் பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.
சிவகங்கை,
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.நாகராஜன் ஆகியோரை ஆதரித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிவகங்கை, இளையான்குடி பஸ் நிலையம், மானாமதுரை தேவர் சிலை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:–
நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் நாட்டிற்கு மிக முக்கியமான தேர்தல் ஆகும். நாடு முன்னேற்றம் அடைய மத்தியில் நிலையான, வலிமையான, திறமையான, உறுதியான பிரதமர் வேண்டும். அண்டை நாடுகள் இந்திய நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை நாட்டிலே ஊடுருவச்செய்து, நம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நேரத்தில் இந்திய நாட்டிற்கு வலிமையான, திறமையான, உறுதியான பிரதமர் வேண்டும். அத்தகைய ஆற்றல் உள்ள பிரதமர் தான் நரேந்திரமோடி.
அவர் மீண்டும் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகத்தான், நாம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறோம். இந்தக்கூட்டணி மெகா கூட்டணி, வெற்றிக்கூட்டணி, கொள்கை பிடிப்புள்ள கூட்டணி, மக்கள் நலன் சார்ந்த கூட்டணி ஆகும்.
தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி ஒரு அராஜக கூட்டணி, ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த கூட்டணி மக்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டது. அந்த கூட்டணியில் உள்ள வைகோ, தி.மு.க.வில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்லி தான் வெளியே சென்றார். எந்த காலத்திலும் தி.மு.க. கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது எனவும், ஸ்டாலின் ஒரு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாதவர் எனவும் கூறினார். ஆனால் தற்போது மீண்டும் இந்த கூட்டணியுடன் சேர்ந்து கொண்டு, ஸ்டாலினை முதல்–அமைச்சராக்கி, ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்பேன் எனப் பேசிவருகிறார். அதுவும் தற்போது ஈரோட்டில் தி.மு.க. சின்னத்தில் வைகோ கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார். இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி தான், தி.மு.க. தலைமையிலான கூட்டணி.
மேலும், தந்தையின் செல்வாக்கில் பதவிக்கு வந்தவர் ஸ்டாலின். அடிமட்ட தொண்டர்களின் கஷ்ட, நஷ்டத்தைப் பற்றி அவருக்கு தெரியாது. ஆனால் நாங்கள் மக்களோடு மக்களாக பழகி படிப்படியாக கட்சியில் உயர்ந்த பதவிக்கு வந்தவர்கள். இந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான். இந்த தேர்தலில் துரோகிகளுக்கு, பொதுமக்கள் தக்க பாடம் கற்பிக்கப்பட வேண்டும். நல்லாட்சி தொடர்ந்திட, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவுக்கு தாமரை சின்னத்திலும், மானாமதுரை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.நாகராஜனுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.