‘நீட் தேர்வை ரத்து செய்ய கை சின்னத்தில் வாக்களியுங்கள்’ தேர்தல் பிரசாரத்தில் எச்.வசந்தகுமார் பேச்சு


‘நீட் தேர்வை ரத்து செய்ய கை சின்னத்தில் வாக்களியுங்கள்’ தேர்தல் பிரசாரத்தில் எச்.வசந்தகுமார் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2019 4:30 AM IST (Updated: 4 April 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்ய கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் எச்.வசந்தகுமார் கூறினார்.

பார்வதிபுரம்,

கன்னியாகுமரி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் நேற்று நாகர்கோவிலில் மணிமேடை, வடசேரி, கிருஷ்ணன் கோவில், மீனாட்சிபுரம் உள்பட பல்வேறு இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.

அவருடன் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் மகேஷ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் சேர்ந்து கை சின்னத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். முன்னதாக பார்வதிபுரம் சந்திப்பில் உள்ள ஒரு கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கிய எச்.வசந்தகுமாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் மேள தாளம் முழங்கவும், பாடல் பாடியும், நடனமாடியும் அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

பார்வதிபுரம் சந்திப்பில் எச்.வசந்தகுமார் பேசுகையில், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் 33 சதவீதம் அரசு வேலைகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். நாட்டில் 5 கோடி பேருக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும். மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பு படிக்க தடையாக இருந்த ‘நீட்’ தேர்வு நீக்கப்படும் என்ற வாக்குறுதிகளை எல்லாம் ராகுல்காந்தி வழங்கி இருக்கிறார். உலகத்திலேயே சிறந்த தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி கொடுத்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய ‘கை’ சின்னத்துக்கு மக்கள் அனைவரும் வாக்குகளை தர வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் ராகுல்காந்தி தலைமையில் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். இதற்காக ‘கை’சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
1 More update

Next Story