தண்ணீர், குப்பை வரியை உயர்த்தியது கவர்னர்தான் நாராயணசாமி குற்றச்சாட்டு
தண்ணீர், குப்பை வரியை உயர்த்தியது கவர்னர்தான் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நெல்லித்தோப்பு தொகுதியில் வீதிவீதியாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:–
இந்த எம்.பி. தேர்தலில் வைத்திலிங்கம் வெற்றிபெற்றால்தான் புதுச்சேரிக்கு நன்மை கிடைக்கும். தற்போது பிரதமர் மோடி, கவர்னர் கிரண்பெடி, ரங்கசாமி ஆகிய 3 பேரும் நமது ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
அனைவருக்கும் 20 கிலோ அரிசி திட்டத்தை அறிவித்தோம். ஆனால் மஞ்சள் நிற ரேசன் கார்டுகளுக்கு அரிசி கொடுக்க முடியாது என்று கவர்னர் கோப்பினை திருப்பி அனுப்பினார். அந்த அரிசியை 10 கிலோவாக குறைத்தார். அரிசிக்கு பதிலாக பணமாக வங்கியில் போடுங்கள் என்றும் கூறுகிறார். மக்கள் விரும்பும் அரிசியை கொடுக்க சொன்னால் கோப்பினை திருப்பி அனுப்புகிறார்.
டெண்டர் விட்டு இப்போது அரிசி வந்தாகிவிட்டது. ஆனால் கவர்னரும், தேர்தல் துறையும் அரிசி கொடுக்கக்கூடாது என்கிறார்கள். 3 மாதம் இலவச அரிசி வழங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
கவர்னர் கிரண்பெடி, குப்பை வரி, மின்சார கட்டணத்தை உயர்த்த சொல்கிறார். நாம் உயர்த்த முடியாது என்று சொன்னால் தன்னிச்சையாக உத்தரவு போடுகிறார். வேலைவாய்ப்பினை உருவாக்கலாம் என்று நினைத்தால் ஆசிரியர், செவிலியர், காவலர் நியமனத்துக்கு தடை விதிக்கிறார்.
ரொட்டி–பால் ஊழியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க தடை விதிக்கிறார். புதுவை அரசிடம் போதிய நிதி உள்ளது. ஆனால் வழங்க முடியவில்லை. மத்தியில் பிரதமர் மோடி போனால்தான் இங்குள்ள கவர்னர் கிரண்பெடியும் போவார். நமது வேட்பாளரான வைத்திலிங்கம் மிகுந்த அனுபவம் உள்ளவர். 8 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அவர் டெல்லி சென்றால்தான் புதுச்சேரிக்கு நிதி வரும். நாங்கள் தண்ணீர், குப்பை வரியை உயர்த்தி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கூறுகிறார். நாங்கள் அவற்றை உயர்த்தவில்லை. கவர்னர் கிரண்பெடிதான் உயர்த்தினார். அவரைப்போய் கேளுங்கள். தேர்தலில் வெற்றிபெற்றதும் வரி உயர்வை குறைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது வேட்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது:–
தேர்தலுக்கான பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் வைத்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலையை ரூ.100 ஆக்கி விடுவார்கள். தங்கம் விலை பவுனுக்கு ரூ.30 ஆயிரமாக உள்ளது. அதை இன்னும் 2 மாதத்தில் ரூ.50 ஆயிரம் ஆக்கிவிடுவார்கள். பிரதமர் மோடி ஏழைகளின் வயிற்றில் அடிக்க நினைக்கிறார். அம்பானி, அதானிக்கு உதவி செய்கிறார்.
நமது பணத்தை வாரிக்கொடுத்து பல தொழில் அதிபர்களை தொழில் செய்ய சொல்கிறார். ஆனால் அவர்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு நாட்டைவிட்டே ஓடிவிடுகிறார்கள். நாம் நகையை அடகுவைத்தாலும் வங்கியில் பணம் தரமாட்டார்கள்.
புதுவையில் உள்ள சின்ன மோடியான ரங்கசாமி பாரதி, சுதேசி மில்லை மூடினார். ரோடியர் மில்லில் மிஷின்களை கழற்றி விற்றுவிட்டு கட்டிடத்தையும் இடித்துவிட்டார்கள். கூட்டுறவுத்துறை நிறுவனங்களில் மூடுவிழா நடத்தியுள்ளார். இதற்கு காரணம் அளவுக்கு அதிகமாக ஆட்களை பணியில் அமர்த்தியதுதான். மூடுவிழா நாயகன்தான் நமது சின்ன மோடி ரங்கசாமி.
4 பேர் வேலை செய்யவேண்டிய இடத்தில் 10 பேரை வேலைக்கு வைப்பார் அவர். அவர் காலம் முதலே பலருக்கு சம்பளம் வழங்க முடியவில்லை.
இவ்வாறு வைத்திலிங்கம் பேசினார்.