கல்லூரியில் சேருவதற்காக வீட்டை விட்டு ஓடியதால் ஆத்திரம், இளம்பெண்ணை எரித்து கொன்ற தந்தை கைது

கல்லூரியில் சேருவதற்காக வீட்டை விட்டு ஓடிய இளம்பெண்ணை எரித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
கொப்பல் மாவட்டம் கனககிரி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணரெட்டி (வயது 45). இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியின் மகள் நந்தினி(20). இவர், பி.யூ.சி. 2-வது ஆண்டு படித்து முடித்திருந்தார். பின்னர் பி.எஸ்.சி. படிக்க வேண்டும் என்று தந்தை நாராயணரெட்டியிடம் நந்தினி கூறினார். இதற்கு நாராயணரெட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.
மேல் படிப்பு படிக்க வேண்டாம் என்று மகளிடம் அவர் உறுதியாக சொல்லி விட்டார். இதனால் தந்தை, மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. உடனே பெற்றோரிடம் சொல்லாமல் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நந்தினி சென்று விட்டார். அங்குள்ள கல்லூரியில் சேருவதற்கு உறவினர் மூலம் நந்தினி முயற்சித்தார்.
இதுபற்றி அறிந்ததும் மாஸ்கியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நாராயணரெட்டி சென்றார். அங்கு தனது மகளிடம் மேல் படிப்பு படிக்க கல்லூரியில் சேர்த்து விடுவதாக நாராயணரெட்டி கூறியதாக தெரிகிறது. இதனை நம்பிய நந்தினியும் தந்தையுடன் உறவினர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், பலகானூரு அருகே உடல் எரிந்தபடி நந்தினி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் பலகானூரு போலீசார் விரைந்து சென்று நந்தினியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது மேல் படிப்பு படிக்க வீட்டில் இருந்து ஓடிவந்தாலும், தனது பேச்சை கேட்காததாலும் ஆத்திரத்தில் மகள் நந்தினியை நாராயணரெட்டி மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து பலகானூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணரெட்டியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






