காட்பாடியில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

காட்பாடியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்பாடி,
காட்பாடி விருதம்பட்டு வள்ளுவர் தெருவில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சக்தி நகர் என்ற இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து குழாய் மூலம் சிறிய குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் கொண்டு சென்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சக்தி நகரில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதாகவும், அதன்பிறகு அதை சரிசெய்து குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மயானக்கொள்ளை திருவிழாவின் போதாவது பழுதான மோட்டாரை சரிசெய்து தண்ணீர் வழங்குங்கள் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போதும் சரி செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் திரண்டு வந்து வேலூர் – சித்தூர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி உதவி கமிஷனர் மதிவாணன் மற்றும் விருதம்பட்டு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நாளைக்குள் (இன்று) குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






