சேலம் அருகே வாகன சோதனையின் போது 37 கிலோ தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல்


சேலம் அருகே வாகன சோதனையின் போது 37 கிலோ தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 April 2019 10:45 PM GMT (Updated: 4 April 2019 2:43 PM GMT)

சேலம் அருகே வாகன சோதனையின் போது 37 கிலோ தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18–ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த குழுவினர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஏற்காடு சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராம்தாஸ் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 2 மணியளவில் சேலம் அருகே காரிப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த வேனில் வந்தவர்கள், வேனுக்குள் தங்க நகைகள் இருப்பதாகவும், கும்பகோணம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்து சேலத்தில் உள்ள தனியார் நகைக்கடைக்கு 22 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வைத்திருந்த தங்கம், வெள்ளிக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏற்காடு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியின நல அலுவலருமான சியாமளாவிடம் நகை, வெள்ளி பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் 28 அட்டை பெட்டிகளில் இருந்த நகைகள் பிரித்து கணக்கீடும் பணி நடைபெற்றது. இந்த நகைகளுக்கு வருமான வரி கட்டப்பட்டு உள்ளதா? எனவும், ஆவணங்கள் சரியாக உள்ளதா? எனவும், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சியாமளா கூறுகையில், பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின் போது 22 கிலோ தங்க நகை, 15 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றுக்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஒப்படைக்கப்படுகிறது. இதனிடையே 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story