ராகுல்காந்தி கரத்தை வலுப்படுத்த கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் எச்.வசந்தகுமார் பேச்சு


ராகுல்காந்தி கரத்தை வலுப்படுத்த கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் எச்.வசந்தகுமார் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2019 11:00 PM GMT (Updated: 4 April 2019 4:12 PM GMT)

ராகுல்காந்தி கரத்தை வலுப்படுத்த ‘கை‘ சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.

நாகர்கோவில்,


மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். இவர் நேற்று களியக்காவிளையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அங்கு காய்கறி வியாபாரிகள், மீன் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் பனங்காலை, மேக்கோடு, மலையடி, மூவோட்டுக்கோணம், இளஞ்சிறை, பளுகல், கண்ணுமாமூடு, தோலடி, மேல்பாலை, குட்டைக்கோடு, வெள்ளச்சிப்பாறை, பத்துகாணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு திறந்த ஜீப்பில் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அவருடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., விஜயதரணி எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தனர். முன்னதாக எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்த ஜீப்பில் நின்றவாறு பேசியபோது கூறியதாவது:–


ஏழைகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ராகுல்காந்தி கொடுத்திருக்கிறார். உலகத்திலேயே எங்கும் இந்த திட்டம் கிடையாது. மேலும் வியாபாரிகளை பாதிக்கின்ற ஜி.எஸ்.டி.யை குறைத்து ஒரே விதமான வரியை விதிப்பதாகவும் கூறி உள்ளார். நானும் ஒரு வியாபாரி தான். வரியால் ஏற்படும் பாதிப்பு எனக்கும் தெரியும். ஒரே வரியாக இருந்தால் தான் நிம்மதி. எனவே 5 அல்லது 7 சதவீதம் மட்டுமே போடப்படும். இதனால் கணக்கு பார்ப்பது சுலபமாக இருக்கும்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எங்கோ சென்று விட்டது. ராகுல்காந்தி பிரதமர் ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்படும். இதனால் லிட்டருக்கு 20 ரூபாய் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும். இதன் மூலம் ஆட்டோ ஓட்டுனர்கள் பயன் அடைவார்கள்.

‘நீட்‘ தேர்வால் டாக்டர் ஆகும் கனவு களைந்து விட்டது. இதனால் ‘நீட்‘ தேர்வு ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார். எனவே ராகுல்காந்தி கரத்தை வலுப்படுத்த ‘கை‘ சின்னத்துக்கு வாக்குகளை தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


இதைத் தொடர்ந்து களியலில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “குமரி மாவட்டத்தில் முந்திரி இறக்குமதி செய்வதில் 10 சதவீதம் வரி இருப்பதாகவும், இந்த வரி இல்லாமல் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் குமரி மாவட்டத்தில் முந்திரி இறக்குமதிக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பெறுவார்கள்“ என்றார்.

Next Story