அதியமான்கோட்டை அருகே ஒரேநாள் இரவில் துணிகரம்: வேளாண்மை துறை ஊழியர், வாலிபர் வீடுகளில் கொள்ளை ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வீட்டில் திருட முயற்சி


அதியமான்கோட்டை அருகே ஒரேநாள் இரவில் துணிகரம்: வேளாண்மை துறை ஊழியர், வாலிபர் வீடுகளில் கொள்ளை ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வீட்டில் திருட முயற்சி
x
தினத்தந்தி 4 April 2019 10:45 PM GMT (Updated: 4 April 2019 5:51 PM GMT)

அதியமான்கோட்டை அருகே ஒரேநாள் இரவில் வேளாண்மை துறை ஊழியர், வாலிபர் வீடுகளில் கும்பல் புகுந்து கொள்ளையடித்து சென்றது. ஓய்வு பெற்ற போலீஸ்காரர் வீட்டிலும் திருட முயற்சி செய்தனர்.

நல்லம்பள்ளி, 

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ளது கோவிலூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் போஸ்கோ (வயது 35). இவர் தர்மபுரி வேளாண்மை துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி திவ்யபிரியா (28). போஸ்கோவின் தாயார் கிரேசா மேரி (56) மற்றும் குழந்தை ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.நள்ளிரவு 1 மணியளவில் மர்ம கும்பல் திடீரென போஸ்கோ வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தது. அப்போது திடுக்கிட்டு எழுந்த போஸ்கோவை தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் திவ்யபிரியா அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

அங்கிருந்து அருகில் உள்ள அருண் (25) என்பவருடைய வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அவர் அங்கு இல்லை. அருண் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த துணிகளை வெளியே தூக்கி வீசினர். பின்னர் ரூ.20 ஆயிரம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர். அப்போது தாங்கள் கொண்டு வந்த அரிவாளை அங்கேயே போட்டு விட்டு சென்றனர்.

அன்றிரவு அதே ஊரில் பூட்டிக்கிடந்த ஓய்வுபெற்ற போலீஸ்காரர் ஆரோக்கியம் வீட்டின் கதவு பூட்டை உடைத்து மர்ம கும்பல் உள்ளே புகுந்தது. அங்கு திருட முயன்றுள்ளனர். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கொள்ளை கும்பல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுபற்றி அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரேநாள் இரவில் 2 வீடுகளில் கொள்ளையும், மற்றொரு வீட்டில் திருட முயன்ற சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story