தேர்தல் விதிமுறை மீறல்: தி.மு.க., அ.தி.மு.க.வினர் உள்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு


தேர்தல் விதிமுறை மீறல்: தி.மு.க., அ.தி.மு.க.வினர் உள்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 5 April 2019 3:45 AM IST (Updated: 5 April 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல், 

தேர்தல் ஆணையம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளது. ஊராட்சி பகுதிகளில் தனியார் கட்டிடங்களில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் அனுமதிபெற்று சுவர் விளம்பரம் செய்யலாம் என அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி சில இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதை கண்டறிந்து அந்தந்த பகுதி போலீசார் சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதேபோல் அனுமதியின்றி பேனர் வைத்தல் உள்ளிட்ட தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை தி.மு.க.வினர் மீது 4 வழக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது 4 வழக்குகளும், அ.தி.மு.க.வினர் மீது 3 வழக்குகளும், தே.மு.தி.க.வினர் மீது 2 வழக்குகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மீது 2 வழக்குகளும், கொங்கு இளைஞர் பேரவை, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் மீது தலா ஒரு வழக்கும் என மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதேபோல் தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் வகையில் பழைய குற்றவாளிகளிடம் 6 மாதத்திற்கு எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என தாசில்தார் மூலம் பாண்டு எழுதி கையெழுத்து வாங்கி வருகிறோம். அந்த வகையில் சர்ச்சைக்கு உரிய நபர்கள் என கண்டறியப்பட்ட அரசியல் பிரமுகர்கள் 36 பேரிடமும் பாண்டு எழுதி வாங்கி உள்ளோம்.

மாவட்டத்தில் 187 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் தேர்தல் நாள் அன்று பணியில் அமர்த்தப்படுவார்கள். துணை ராணுவத்தினரை பொறுத்தவரையில் 3 கம்பெனி தேவை என சொல்லி உள்ளோம். இவர்கள் அடுத்த வாரம் நாமக்கல் வருகை தர உள்ளனர். அவர்கள் வருகை தந்த பிறகு கொடி அணிவகுப்பும் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story