கம்பம் அருகே, ஒரே பெண்ணுடன் இருவருக்கு ஏற்பட்ட கள்ளக்காதல் கொலையில் முடிந்தது - கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
கம்பம் அருகே ஒரே பெண்ணுடன் இருவருக்கு ஏற்பட்ட கள்ளக்காதல் கொலையில் முடிந்தது. இதையடுத்து கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள நாராயணத்தேவன்பட்டி-சுருளிப்பட்டி செல்லும் பகுதியில் மணப்படை ஆலமரம் அருகே புதர் மண்டிகிடக்கும் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு வீரபாண்டி மற்றும் ராயப்பன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் முகம் சிதைக்கப்பட்டு ரத்தம் உறைந்த நிலையில் இருந்தது. இதனால் இறந்தவர் யார்? என்று அடையாளம் தெரியாமல் இருந்தது.
இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இறந்தவரின் உறவினர்கள் சிலர் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் இறந்தவர் சுருளிப்பட்டியை சேர்ந்த சிவநாதன் (வயது26) என்றும், இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் என்றும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். அதையொட்டி போலீசார், இறந்தவரின் செல்போனை கைப்பற்றி கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் யார்,யாருடன் பேசியுள்ளார் என்ற விவரத்தை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கொலை செய்யப்படுவதற்கு முன்பு சிவநாதன் செல்போன் எண்ணுக்கு அவரது நண்பர் சுருளிப்பட்டியை சேர்ந்த சிலம்பரசன் அதிக நேரம் பேசியுள்ளது தெரியவந்தது. எனவே போலீசார் சிலம்பரசன் மீது சந்தேகம் அடைந்து அவரை பிடித்து துருவித்துருவி விசாரணை செய்தனர். அப்போது அவர் நண்பர்கள் உதவியுடன் சிவநாதனை கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். இது தொடர்பாக சிலம்பரசன் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
நான் சுருளிப்பட்டி கலைஞர்நகரில் வசித்து வருகிறேன். கார்டிரைவராக உள்ளேன். இன்னும் திருமணமாகவில்லை. நானும் சிவநாதனும் நண்பர்கள். சிவநாதன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நான் திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தேன். சிவநாதனும் எனக்கு தெரியாமல் அந்த பெண்ணிடம் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தார் என்பது பிறகுதான் எனக்கு தெரிந்தது. இதனால் அவர் மீது எனக்கு கோபம் அதிகரித்தது. இந்த நிலையில் சிவநாதன் கடந்த 27-ந்தேதி சுருளிபட்டிக்கு வந்தார். அப்போது அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். எனவே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த செல்லலாம் என்று சிவநாதனை செல்போனில் அழைத்தேன். அதன்படி அவர் வந்தார். இதையடுத்து அங்குள்ள மணப்படை பகுதியில் நான், சிவநாதன் மற்றும் எனது நண்பர் பாண்டீஸ்வரன் உள்பட 4 பேரும் மது அருந்தி கொண்டு இருந்தோம். இந்த சமயத்தில் அந்த பெண் குறித்து பேசினோம்.
இதில் எங்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. அப்போது நான் அணிந்து இருந்த வேட்டியால் சிவநாதன் கழுத்தை இறுக்கினேன். மற்றவர்கள் மதுபாட்டில் மற்றும் கல்லால் சிவநாதனின் முகம், கழுத்து பகுதியில் குத்தினார்கள். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் நாங்கள் கேரள மாநிலத்திற்கு தப்பிச் செல்ல முயன்றோம். ஆனால் அதற்குள் போலீசாரிடம் சிக்கி கொண்டோம். இவ்வாறு சிலம்பரசன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சிலம்பரசன், பாண்டீஸ்வரன் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story