“இந்தியா வல்லரசாக பா.ஜனதா ஆட்சி தொடர வேண்டும்” ஜி.கே.வாசன் பேச்சு


“இந்தியா வல்லரசாக பா.ஜனதா ஆட்சி தொடர வேண்டும்” ஜி.கே.வாசன் பேச்சு
x
தினத்தந்தி 5 April 2019 3:45 AM IST (Updated: 5 April 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா வல்லரசாக பா.ஜனதா ஆட்சி தொடர வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு திறந்த ஜீப்பில் நின்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதலில் நாம் அனைவரும் இந்தியர்கள், அதன் பின்னர்தான் தமிழர்கள். உலக நாடுகள் இடையே நமது நாடு பாதுகாப்பானதாகவும், வளர்ச்சி அடைந்ததாகவும் இருக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையால் நமது நாட்டின் வலிமையை உலகறியச் செய்தவர் பிரதமர் நரேந்திரமோடி. இந்தியா வல்லரசாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி தொடர வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெற்றி பெறுவது உறுதி. அவரது வெற்றியை உறுதி செய்வதற்காகத்தான் வந்துள்ளேன். அவரது குரல் நாடாளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காக ஓங்கி ஒலிக்கும். அவர் தமிழர்களின் பெருமைகளை உலகறியச் செய்வார்.

ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து, தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்ற எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வழியில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்கின்றனர். ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படுகின்றனர். குக்கிராமங்களில் இருந்து பெருநகரங்கள் வரையிலும் அனைத்து திட்டங்களும் சிறப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவும், தமிழகமும் வளர்ச்சி அடைவதற்கு பா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகள் தொடர வேண்டும்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி முரண்பாட்டின் மொத்த வடிவமாக உள்ளது. மதசார்பின்மை பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை. ஏனெனில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் வழங்கப்பட்டாலும், ஒரு தொகுதியில்கூட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட போட்டியிட நிறுத்தவில்லை. இனியும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஒரு கொள்கையும், மத்தியில் ஒரு கொள்கையும் வைத்துள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அதிகாரம் பதவியை பெற்றார்கள். பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இரும்பு பெண்மணி ஆவார். அவர் தனது கட்சியை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வதுடன், மத்திய அரசு மூலமாக தமிழகத்தில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். எனவே அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். அவருடன் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ மற்றும் பலர் உடன் இருந்தனர்.

த.மா.கா. மாநில செயலாளர் மால்மருகன், வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், தெற்கு மாவட்ட தலைவர் விஜயசீலன், துணை தலைவர்கள் ரசாக், பால்ராஜ், நகர தலைவர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story