நெல்லையில் 2-வது நாளாக பிரசாரம்: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்க தி.மு.க.வினர் முயற்சி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


நெல்லையில் 2-வது நாளாக பிரசாரம்: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்க தி.மு.க.வினர் முயற்சி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 April 2019 10:15 PM GMT (Updated: 2019-04-05T01:57:50+05:30)

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்க தி.மு.க.வினர் முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

நெல்லை,

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வது நாளாக பிரசாரம் மேற்கொண்டார். அவர் வள்ளியூரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து நாங்குநேரி, நெல்லை டவுன், மேலப்பாளையம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறேன். 16 நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறேன். அதனால் எனது தொண்டை பேச முடியாத அளவு ஆகிவிட்டது. இருந்தாலும் நாட்டு நடப்பு விஷயங்களை மக்களிடம் சொல்வதற்காக உங்களை தேடி வந்து இருக்கிறேன். வெயில் கொளுத்துகிறது. அதையும் பாராமல் என்னை வரவேற்க ஏராளமான கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து இருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நானும் ஒரு விவசாயிதான். இந்த வெயிலில் வேலை செய்வது பெரிய விஷயம் அல்ல. வயல்வெளியில் வேலை செய்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதனால் தான் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்து வருகிறேன்.

மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக வலுவான கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. மோடி திறமையானவர். ஆளுமை திறன் மிக்கவர். அவர் மீண்டும் பிரதமராக வந்தால் நாட்டின் பாதுகாப்பு மேம்படும். மக்களும் நிம்மதியாக இருப்பார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும். அப்படி வந்தால் தான் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியும்.

இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடைபெறும் தேர்தல். இதனால் நாட்டு மக்களிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. பல்வேறு கட்சிகளும் தேர்தலின் முடிவுவை எதிர்பார்க்கிறார்கள். அ.தி.மு.க. என்ற இயக்கம் வலிமையானது என்பதை காட்ட வேண்டும். நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும். தமிழக மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற வேண்டும் என்றால் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என்பது அவசியம். அதை கூட்டணி கட்சி நிர்வாகிகள் புரிந்து கொண்டு தேர்தலில் பணியாற்ற வேண்டும்.

தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை சந்தர்ப்பவாத கூட்டணி. ஒவ்வொரு மாநிலத்திலும் செல்வாக்கு உள்ள தலைவர்கள் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் மாயாவதி, அகிலேஷ்யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பிரதமராக வேண்டும் என்று அவர்களின் மனதிற்குள் ஆசை இருக்கிறது.

ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்மொழிந்துள்ளார். இதுவே அவருக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்துகிறது. வெவ்வேறு கருத்துக்களை கொண்ட ஒரு கூட்டணியால் எப்படி ஒரு நிலையான பிரதமரை தரமுடியும். வலிமையான ஆட்சியை எப்படி அமைக்க முடியும்.

தி.மு.க. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு விதமான தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளது. அதில் அறிவித்த திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும். குறிப்பாக ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்று கூறினார்கள். அவர்களால் எப்படி கொடுக்க முடியும். இவ்வாறு கூறி மக்களை குழப்பி வருகிறார்கள். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள் தி.மு.க.வினர். 2ஜி அலைக்கற்றையில் எத்தனை கோடி ரூபாய் கொள்ளையடித்தார்கள் என்பது நாட்டிற்கு தெரியும்.

முன்னாள் அமைச்சரின் மகன் போட்டியிடும் தொகுதியில் 30 கிலோ தங்க நாணயம் பிடிபட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.10 கோடி ஆகும். வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்ற முயற்சியில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரையில் ஜெயலலிதா வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அவர் தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது இல்லாமல் மக்களுக்காக புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட உயர் பதவிக்கு வரலாம். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கி அழகு பார்த்தார். எங்கள் கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் சாதாரண உறுப்பினர்களாக இருந்தவர்கள். நானும் படிப்படியாக வளர்ந்து இந்த பதவிக்கு வந்து இருக்கிறேன்.

ஆனால் தி.மு.க.வில் அப்படி அல்ல. முதலில் கருணாநிதி, அடுத்தது மு.க.ஸ்டாலின் தலைவராக உள்ளார். தற்போது புது தலைவர் உதயநிதி ஸ்டாலின் முளைத்து உள்ளார். தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மு.க.ஸ்டாலின் தினமும் ஒரு பொய் மூட்டைகள் அவிழ்த்து விடுகிறார்.

தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர் வைகோ. அவர் தி.மு.க.வை கம்பெனி என்று விமர்சனம் செய்தவர். தற்போது வைகோ தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். அத்துடன் அவருடைய வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அந்த கட்சியின் வேட்பாளர் ம.தி.மு.க.வா, தி.மு.க.வா என்ற சந்தேகம் உள்ளது.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிருடன் பேசமுடியாத நிலையில் இருந்தபோது மு.க.ஸ்டாலினை தலைவராக அறிவிக்கவில்லை. அவர் செயல் தலைவராகவே செயல்பட்டு வந்தார். கருணாநிதிக்கு கூட மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லை.

மு.க.ஸ்டாலின் தூங்கும்போதும், தூக்கத்தில் இருந்து எழும்போதும் என்னைப்பற்றியே (எடப்பாடி பழனிசாமி) நினைத்து கொண்டு இருக்கிறார். எங்கே சென்றாலும் என்னை விமர்சனம் செய்துதான் பேசி வருகிறார். மக்களை பற்றி அவர் சிந்திப்பதாக தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியை பிடித்து விடலாம் என்று நினைக்கிறார். அது ஒரு போதும் நடக்காது.

அ.தி.மு.க.வால் பலன் பெற்றவர்கள் இந்த கட்சியை உடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் செய்த துரோகத்தால் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

நெல்லை மாநகராட்சிக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் வழங்கப்பட்டு உள்ளன. மத்திய, மாநில அரசின் நிதியின் கீழ் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ரூ.78 கோடியில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை கொடிசியா போல் நெல்லையில் ரூ.56¾ கோடி செலவில் நவீன வர்த்தக மையம் கட்டப்பட உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்காக ரூ.730 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகின்றது. ரூ.801 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றது. இந்த திட்டம் முழுமையாக நிறைவு பெற்றால் நெல்லை மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக உருவாகும்.

நெல்லை தொகுதி மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். உங்கள் அடிப்படை பிரச்சினைகளை மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற வேண்டும். அதற்காக இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு இரட்டை இல்லை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்தியில் நிலையான ஆட்சி அமையும் போது தமிழகத்தின் நலன்கள் கேட்டுப் பெறப்படும். கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து உழைத்து அ.தி.மு.க. கூட்டணியை 40 இடங்களில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வள்ளியூரில் இன்பதுரை எம்.எல்.ஏ தலைமையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். அதேபோல் நெல்லை டவுன் வாகையடி முனையில் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பிரசாரத்தில் அமைச்சர் ராஜலட்சுமி, எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், பிரபாகரன், விஜிலா சத்யானந்த், வசந்திமுருகேசன், செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவை தலைவர் பரணிசங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை தலைவர் ஜெரால்டு, சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் அரிகரசிவசங்கர், முன்னாள் எம்.பி. சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் முகம்மது அலி, ஜெயபாலன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமுருகன், பா.ஜனதா மாவட்ட தலைவர் தயா சங்கர், பா.ம.க. மாவட்ட செயலாளர் சியோன் தங்கராஜ், மாநில துணை பொதுச் செயலாளர் அன்பழகன், துணை தலைவர் பிச்சையா பாண்டியன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சேவியர், பகுதி செயலாளர் அழகேசராஜா, த.மா.கா. மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் ரமேஷ் செல்வன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், மாவட்ட செயலாளர் நாகராஜன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, அம்பை, ஆலங்குளத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

தென்காசி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:-

தென்காசி தொகுதி மக்களின் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை டாக்டர் கிருஷ்ணசாமி என்னிடம் கொடுத்து உள்ளார். அந்த கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். இது விவசாயிகள் நிறைந்த பகுதியாக உள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும். உங்கள் தொகுதி கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க டாக்டர் கிருஷ்ணசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முருகையா பாண்டியன், மனோகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story