சிறுமுகை அருகே காட்டுயானை சாவு, மின்வேலி அமைத்த விவசாயி கைது
சிறுமுகை அருகே மின்வேலியில் சிக்கி காட்டுயானை இறந்தது. இதுதொடர்பாக தோட்டத்தின் விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பழத்தோட்டத்தை சேர்ந்தவர் நாசர்அலி (வயது 54). அவருடைய வாழைத்தோட்டத்தில் நேற்று முன்தினம் காட்டுயானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.இதில் வாழைத்தோட்டத்தை சுற்றிலும் நாசர்அலி மின்வேலி அமைத்து இருந்ததும், அதில் உணவு தேடி வந்த காட்டுயானை சிக்கி இறந்ததும் தெரியவந்தது. இது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக விவசாயி நாசர்அலியை வனத்துறையினர் கைது செய்து, அவரை மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
சிறுமுகை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், நாசர்அலி வாழைத்தோட்டத்தை சுற்றிலும் பேட்டரி மூலம் இயங்கும் மின்வேலி அமைத்துள்ளார். ஆனால் அதற்கு நேரடியாக உயர் மின்இணைப்பு கொடுத்துள்ளார். இதனால் தான் மின்வேலியில் சிக்கிய காட்டுயானை இறந்துள்ளது.
காட்டு யானை இறந்து கிடந்ததை பார்த்த நாசர்அலி உடனடியாக மின்வேலி கம்பிகளை அகற்றி அருகில் உள்ள ஆற்றில் போட்டுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் மின்வேலி கம்பிகள் கைப்பற்றப்பட்டன. இந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் விவசாய தோட்டத்தில் மின்வேலி அமைக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story