புயல் தாக்குதலிலும் நிமிர்ந்து நிற்கும் பனை மரங்கள் கறம்பக்குடி பகுதியில் நுங்கு விளைச்சல் அமோகம்


புயல் தாக்குதலிலும் நிமிர்ந்து நிற்கும் பனை மரங்கள் கறம்பக்குடி பகுதியில் நுங்கு விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 5 April 2019 4:00 AM IST (Updated: 5 April 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் தாக்குதலிலும் தப்பி கறம்பக்குடி பகுதியில் நிமிர்ந்து நிற்கும் பனை மரங்களில் நுங்கு நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் சாலையோரங்களில் விற்பனை ‘களை’ கட்டியது.

கறம்பக்குடி,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் 100 டிகிரியை தாண்டி அடிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வெப்பத்திலிருந்து உடலை குளிர்ச்சியாக்கவும், தாகம் தீர்க்கவும் பல விதமான குளிர் பானங்களை வாங்கி பொதுமக்கள் அருந்துகின்றனர். கடைகளில் விற்கப்படும் குளிர் பானங்கள் உடலுக்கு கேடு விளைப்பதோடு உடல் சூட்டையும் அதிகப்படுத்துகிறது.

இதனால் இயற்கையாக கிடைக்கும் பழங்கள், இளநீர், வெள்ளரி, நுங்கு போன்றவற்றை மக்கள் வாங்க தொடங்கி உள்ளனர். கஜா புயலின் தாக்குதலால் 80 சதவீத தென்னை மரங்கள் அழிந்து விட்ட நிலையில், இளநீர் கிடைப்பது அரிதாகி விட்டது. வெளி மாவட்டங்களிலிருந்து வாங்கி விற்கப்படும் இளநீரும் விலை மிக அதிகமாக உள்ளதால் சாதாரண மக்கள் வாங்க முடிவதில்லை.

நல்ல விளைச்சல்

இந்நிலையில், சுற்றி சூழ்ந்து அடித்த கஜா புயலின் கோரத்தாக்குதலில் ஆலமரமே அடியோடு சாய்ந்த நிலையில், தமிழ்நாட்டின் அடையாளமான பனை மரங்கள் மட்டும் எந்த பாதிப்பிற்கும் உள்ளா காமல் நிமிர்ந்து நிற்கின்றன. கறம்பக்குடி பகுதியில் சாலையோரங்களில் வயல் வரப்புகளிலும் வரிசை கட்டி நிற்கும் பனைமரங்களில் தற்போது நுங்கு நல்ல விளைச்சல் கண்டுள்ளது. பனை ஏறும் தொழிலாளர்கள் மரங்கள் மீது ஏறி நுங்குகளை வெட்டி விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர். கறம்பக்குடி பகுதியில் சாலையோரங்களில் தற்போது நுங்கு விற்பனை ‘களை’ கட்டியுள்ளது. வெயிலின் தாக்குதலில் தப்பிக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நுங்குகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

மிகச்சிறந்த உணவு

இதுகுறித்து நுங்கு விற்பனை செய்யும் தொழிலாளி ராமஜெயம் கூறியதாவது:-

கோடை வெயிலால் ஏற்படும் உடல் சூடு, வியர்குரு, வேர்வை கட்டிகள், சிறுநீர் பிரச்சினைகள் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு நுங்கு மிகச்சிறந்த உணவு பொருளாகும். தானாக வளர்ந்து பலன் தரும் பனைமரங்கள் இயற்கை நமக்களித்த வரம் என்றே சொல்லலாம். பனை மரங்கள் மீது ஏறுவதற்கு தனிபயிற்சி வேண்டும். கறம்பக்குடி பகுதியில் ஒரு, சில பனை ஏறும் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். உழைப்பும், கஷ்டமும் அதிகம் வருவாய் குறைவு. இருப்பினும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நுங்குகளை விரும்பி வாங்கி சாப்பிடுவதால் ஆத்ம திருப்தி உள்ளது. 3 சுளை கொண்ட நுங்கு ரூ.10-க்கு விற்கப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story