2-வது கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல் நிறைவடைந்தது 14 தொகுதிகளில் 317 பேர் வேட்புமனு தாக்கல் இன்று பரிசீலனை


2-வது கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல் நிறைவடைந்தது 14 தொகுதிகளில் 317 பேர் வேட்புமனு தாக்கல் இன்று பரிசீலனை
x
தினத்தந்தி 4 April 2019 9:47 PM GMT (Updated: 4 April 2019 9:47 PM GMT)

2-வது கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல் நிறைவடைந்தது. 14 தொகுதிகளில் 317 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (வெள்ளிக் கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் நடக்கிறது. பெங்களூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வருகிற 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி தொடங்கி 26-ந் தேதியுடன் நிறைவடைந்தது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 241 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. அதாவது சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, கலபுரகி, ராய்ச்சூர், பீதர், கொப்பல், பல்லாரி, ஹாவேரி, தார்வார், உத்தர கன்னடா, தாவணகெரே, சிவமொக்கா ஆகிய தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது.

172 பேர் மனு தாக்கல்

இந்த 14 தொகுதிகளில் வருகிற 23-ந் தேதி நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம்(மார்ச்்) 28-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 172 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும்.

கடைசி நாளான நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களான மல்லிகார்ஜுன கார்கே கலபுரகி தொகுதியிலும், ராஜசேகர கித்னால் கொப்பல் தொகுதியிலும், சுனிதா சவான் விஜயாப்புரா தொகுதியிலும், வினய் குல்கர்னி தார்வார் தொகுதியிலும், பா.ஜனதாவை சேர்ந்த அமரேஸ்வர நாயக் ராய்ச்சூர் தொகுதியிலும், சுரேஷ் அங்கடி பெலகாவி தொகுதியிலும், சிவக்குமார் உதாசி ஹாவேரி தொகுதியிலும், சித்தேஸ்வர் தாவணகெரே தொகுதியிலும் போட்டியிட தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இவர்கள் உள்பட நேற்றுடன் சேர்த்து 317 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் பரிசீலனை இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 8-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.

Next Story