காவிரி பிரச்சினையில் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்க பாடுபடுவேன் சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதா பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் காவிரி பிரச்சினையில் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்க பாடுபடுவேன் என்று மண்டியா சுயேச்சை வேட்பாளரான நடிகை சுமலதா கூறினார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் நடிகை சுமலதா, மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட்டுள்ளார். இதனால் சுமலதா- நிகில் குமாரசாமி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் நடிகை சுமலதா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். நான் 7-வது படிக்கும்போது எனது தந்தை இறந்துவிட்டார். என்னுடன் சேர்த்து உடன் பிறந்தவர்கள் 5 பேர். எங்களை எனது தாயார் தான் கஷ்டப்பட்டு வளர்த்தார்.
பின்விளைவுகள்
10-ம் வகுப்பு முடித்த பிறகு திரைத்துறைக்கு வந்துவிட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் சூழ்நிலை சந்தர்ப்பம் காரணமாக திடீரென அரசியலுக்கு வந்துள்ளேன்.
எனக்கு அரசியல் செய்ய தெரியாது. நான் எனது கணவரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டவள். எனக்கு அவர் தான் முன்மாதிரி. அரசியலுக்கு வந்தால் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டவை தான்.
அழைப்பு விடுக்கவில்லை
மண்டியாவில் பெரிய அரசியல் கட்சியை எதிர்த்து போட்டியிட எனக்கு எப்படி தைரியம் வந்தது என்று சிலர் கேட்கிறார்கள். அது எனக்கும் தெரியவில்லை. மண்டியா வளர்ச்சி பெற வேண்டும் என்று அம்பரீஷ் கனவு கண்டார். அவரது கனவை நிறைவேற்றவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
சுயேச்சையாக போட்டியிட்டுள்ளேன். பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவை சந்தித்து ஆதரவு கேட்டேன். நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக என்னிடம் கூறினார். அதற்கு நான் நன்றி தெரிவித்தேன். பிரசாரத்திற்கு வருமாறு எடியூரப்பாவுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை.
காங்கிரஸ் தொண்டர்கள்
தேர்தலில் வெற்றி பெற்றால், பா.ஜனதாவில் சேருவீர்களா? என்று கேட்கிறீர்கள். மண்டியா மக்களின் கருத்துகளை கேட்டறிந்து அதன்படி முடிவு எடுப்பேன். இந்த தேர்தலில் காங்கிரஸ் தொண்டர்களின் ஆதரவும் எனக்கு உண்டு. அவர்கள் தாமாக முன்வந்து எனக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு அதிக வாக்குகள் விழுந்த பகுதியில் குடிநீர், சாலை வசதியை செய்து கொடுப்பது இல்லை என்று அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் கூறியதாக சொல்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகளே இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளை புறக்கணித்து செயல்படுவது சரிதானா?.
ஆழமாக ஆலோசித்தேன்
எனக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களை, தாக்குவது, அவர்கள் செய்யும் தொழிலை முடக்குவது, மிரட்டுவது என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்யும் வரை நான் ஒருவித குழப்பத்திலேயே இருந்தேன்.
தேர்தலில் போட்டியிடுவது சரியா?, அதனால் ஏதாவது பிரச்சினைகள் வருமா?, ஜனதா தளம்(எஸ்) கட்சியில் உள்ள உறவினர்களை பகைத்துக்கொள்ளும் நிலை வருமே என்றெல்லாம் ஆழமாக ஆலோசித்தேன்.
நடிகர்கள் தர்ஷன், யஷ்
காங்கிரசில் டிக்கெட் கேட்டேன். மண்டியா ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுத்துள்ளோம், வேறு எந்த தொகுதியையாவது கேளுங்கள் கொடுக்கிறோம் என்று காங்கிரசார் கூறினர். மைசூரு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு தொகுதிகளில் டிக்கெட் கொடுப்பதாக கூறினர். எம்.எல்.சி. பதவி கொடுத்து, மந்திரி ஆக்குவதாக உறுதியளித்தனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
நடிகர்கள் தர்ஷன், யஷ் தாமாக முன்வந்து பிரசாரம் செய்கிறார்கள். பிரசாரத்திற்கு நான் யாரையும் அழைக்கவில்லை. யாருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்வது இல்லை என்று நடிகர் சுதீப் முடிவு எடுத்துள்ளார். அந்த முடிவை நான் மதிக்கிறேன்.
நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்
மண்டியாவில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எனக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது தவறு. சாதி பற்றி பேசுகிறார்கள். இது சரியல்ல. மண்டியாவில் முதல்-மந்திரி தனது ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். இதுபற்றி நாங்கள் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால், காவிரி பிரச்சினையில் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்க பாடுபடுவேன். மண்டியா பகுதியில் இது மிக முக்கியமான பிரச்சினை ஆகும். பெண்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவேன். மண்டியா பிரச்சினைகளுக்கு டெல்லியில் குரல் கொடுப்பேன். வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்.
இவ்வாறு சுமலதா கூறினார்.
Related Tags :
Next Story