மண்டியா தேர்தல் பார்வையாளர், ஹாசன் போலீஸ் சூப்பிரண்டு பணி இடமாற்றம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை


மண்டியா தேர்தல் பார்வையாளர், ஹாசன் போலீஸ் சூப்பிரண்டு பணி இடமாற்றம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 April 2019 9:59 PM GMT (Updated: 2019-04-05T03:29:13+05:30)

தேவேகவுடாவின் பேரன்கள் போட்டியிடும் தொகுதிகளான மண்டியாவில் தேர்தல் பார்வையாளரையும், ஹாசனில் போலீஸ் சூப்பிரண்டையும் பணி இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

பெங்களூரு, 

ஹாசன் நாடாளுமன்ற தொகுதியில் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவும், மண்டியா தொகுதியில் இன்னொரு பேரன் நிகில் குமாரசாமியும் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடுகிறார்கள். பிரஜ்வல் ரேவண்ணா, பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணாவின் மகன் ஆவார். நிகில் குமாரசாமி, முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் ஆவார்.

இந்த நிலையில் ஹாசன், மண்டியா மாவட்டங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பிரஜ்வல் ரேவண்ணா, நிகில் குமாரசாமி ஆகியோருக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அந்த அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா சார்பில் புகார் செய்யப்பட்டது.

பணி இடமாற்றம்

இந்த நிலையில், ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கவுடா, மண்டியா தேர்தல் பார்வையாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் நேற்று அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சேத்தன் சிங் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மண்டியா தேர்தல் பார்வையாளர் பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. மேலும் பிரகாஷ் கவுடா, ரஞ்சித் குமார் ஆகியோருக்கு புதிய பொறுப்புகள் ஒதுக்கப்படவில்லை.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பணி இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறினார்.

4 நாட்களுக்கு பிறகு

ஹாசன் கலெக்டராக இருந்த அக்ரம் பாஷா கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஹாசன் மாவட்ட கலெக்டராக பிரியங்கா மேரி பிரான்சிஸ் நியமிக்கப்பட்டார். கலெக்டர் பணி இடமாற்றம் நடந்த 4 நாட்களில் ஹாசன் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கவுடாவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story