திருமங்கலம் அருகே விபத்தில் ராணுவ வீரர் பலி


திருமங்கலம் அருகே விபத்தில் ராணுவ வீரர் பலி
x
தினத்தந்தி 5 April 2019 4:28 AM IST (Updated: 5 April 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ராணுவ வீரர் பரிதாபமாக இறந்துபோனார்.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள சுங்குராம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகன் சரவணன் (வயது 25). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அவர் பணியாற்றி வந்தார். இதற்கிடையே சரவணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான சுங்குராம்பட்டிக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் அவர் நேற்று இரவு 7 மணி அளவில் சுங்குராம்பட்டியில் இருந்து திருமங்கலத்திற்கு வேலை தொடர்பாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சுங்குராம்பட்டிக்கும், விடத்தக்குளம் கிராமத்திற்கும் இடைப்பட்ட சாலையில் அவர் வந்தபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சரவணன் உயிருக்காக போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்துபோனார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்துபோன ராணுவ வீரர் சரவணனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரது அண்ணன் கார்த்திக்கும் ராணுவத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story