‘ராணுவ கோப்புகளை பாதுகாக்க முடியாதவர்கள் நாட்டை எப்படி பாதுகாப்பார்கள்?’ காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி


‘ராணுவ கோப்புகளை பாதுகாக்க முடியாதவர்கள் நாட்டை எப்படி பாதுகாப்பார்கள்?’ காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
x
தினத்தந்தி 4 April 2019 11:02 PM GMT (Updated: 4 April 2019 11:02 PM GMT)

ராணுவ கோப்புகளை பாதுகாக்க முடியாதவர்கள் நாட்டை எப்படி பாதுகாப்பார்கள் என்று மதுரையில் கே.எஸ்.அழகிரி பேசினார்.

மதுரை,

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து மதுரை முனிசாலை பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார். அவர் கூறியதாவது:-

நமது நாடு வேறு திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போர் தான் இங்கு அரங்கேறுகிறது. பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி 350 பேர் கொல்லப்பட்டதாக கூறிய நிலையில் இங்குள்ள ஊடகங்களுக்கு எந்த படங்களும் கிடைக்கவில்லை. ஆனால் பி.பி.சி. போன்றவற்றுக்கு எப்படி படம் கிடைக்காமல் போனது என்றால் அதில் உண்மை இல்லை.

நீட் தேர்வு இல்லை என்ற காங்கிரஸ் அறிவிப்பு கோடிக்கணக்கான மக்களின் மனதில் பாலை வார்த்துள்ளது. அதை தொடர்ந்து வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு மாதம்தோறும் 6,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.

துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பதை நாங்கள் குறை கூறவில்லை. ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து 10 ரூபாயாவது கைப்பற்றப்பட்டதா?. அதே போன்று தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஏன் சோதனை மேற்கொள்ள வில்லை என்ற கேள்வியும் எழுகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை மோடிக்கு ஜால்ரா போடுவது போல செயல்படுவதால் மதிப்பு இல்லாத கட்சியாகி விட்டது. வாஜ்பாய் முதல் மோடி வரை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாத நிலையில் இந்தியாவை பாதுகாப்பது நாங்கள் தான் என கூறி வருகின்றார். உண்மையில் இந்தியாவை பாதுகாத்தது இந்திரா காந்தியா? நீங்களா?

நாட்டின் ராணுவ கோப்புகளை கூட பாதுகாக்க முடியாத இவர்கள் எப்படி நாட்டை பாதுகாப்பார்கள். ரபேல் ஊழல் பற்றி ஆதாரத்துடன் புத்தகமாக வெளியிட்ட நிலையில் அதனை தேர்தல் ஆணையம் தடை விதித்து பறிமுதல் செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வேட்பாளர் வெங்கடேசன், தி.மு.க. எம்.எல்.ஏ. மூர்த்தி மற்றும் தளபதி, ம.தி.மு.க. நிர்வாகி புதூர் பூமிநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மதுரை மாநகர காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் செய்திருந்தார்.

Next Story